திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை? ஸ்டாலினுக்கு ஆதரவான பேச்சின் பின்னணி இதுவும் இருக்குமோ?

  • சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, அண்மைக்காலமாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

    Advertisement

    திமுகவுடன் நெருங்கிய நட்புறவில் இருப்பவர் செல்வப்பெருந்தகை. இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது திமுகவுடன் இவர் இணக்கமாக சென்றதன் அடிப்படையில் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கணிசமான தொகுதிகளை ஒதுக்கியிருந்தது.

    Advertisement

    இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தவெக வென்றவுடன் அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது. எனினும் செல்வப்பெருந்தகை மகள் திருமணத்திற்கு ஸ்டாலின் நேரடியாக வந்திருந்து மணமக்களை வாழ்த்தியிருந்தார். அந்தளவுக்கு அவர்களுக்குள் நட்புறவு இருக்கிறது.

    சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தார். அந்த வகையில் அவர் தேர்தல் முடிந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாணிக்கம் தாகூருக்கு ஆரம்பத்திலிருந்தே தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் அதை தடுத்தவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட திமுகவுக்கு நெருக்கமான கதர்கள் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    தவெக கட்சி பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக வந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது தவெகவினர் பிரதமர் வேட்பாளர் விஜய் என கூறி வருகிறார்கள். இதையும் விஜய் மறுப்பேதும் சொல்லாமல் ரசித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

    ஆனால் காங்கிரஸ் கட்சியோ 2029 ஆம் ஆண்டு ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர். விஜய் முதல்வர் மட்டுமே என கூறி வருகிறது. ஒரு வேளை இதில் மாறுபட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான ராஜேஷ்குமார் எச்சரித்துள்ளார். மேலும் தவெக ஆட்சியில் இருக்க முக்கிய காரணமே காங்கிரஸ்தான் என்றும் மாணிக்கம் தாகூர் விமர்சித்து தவெகவுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    Advertisement

    ஆனாலும் பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற பேச்சு தவெகவினர் மத்தியில் அடங்கவில்லை. இந்த நிலையில் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த செல்வப்பெருந்தகை அண்மைக்காலமாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

    பிரதமர் வேட்பாளர் குறித்த சம்பவத்தில், ஒரு சேனலுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, தவெக ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவை ராகுல் எடுத்தார், அவர் எடுத்தார் , இவர் எடுத்தார் என்பதெல்லாம் நான் சொல்ல வரவில்லை.

    "என்னை பிரதமராக்க வேண்டும்" என ராகுலே நேராக வந்து கேட்பாரா, ஆக ஏதோவொரு கணக்கில் நாங்கள் எடுத்த முடிவு தவறாகி அவமானப்பட்டு நிற்கிறோம் என தெரிவித்திருந்தார்.

    Advertisement

    அது போல் இன்னொரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்ய தவறிவிட்டதோ என்ற வேதனை எனக்குள் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக ஸ்டாலின் கடுமையாக உழைத்தார், ஆனால் அவருக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் இப்போதும் எங்களுக்கு இருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    சைலன்ட்டாக இருந்துவிட்டு தற்போது இவர் ஏன் இது போன்ற கருத்துகளை கூறுகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் நிபுணர்களிடம் கேட்ட போது "தவெகவுடன் காங்கிரஸ் கட்சி இணைந்ததில் பலருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதிலும் திமுகவை காங்கிரஸ் இத்தனை கிண்டல் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் எதிர்க்காமல் இருப்பதும் நடுநிலையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைக்குமா என்ற சூழல் எழுந்துள்ளது. எப்போது, ஸ்டாலினுக்கு விசுவாசமாக இல்லையோ என செல்வப்பெருந்தகை உணர்ந்துவிட்டாரோ, நான் இருக்கிறேன் என்று கூறி திமுகவில் இணையலாம் என சொல்லப்படுகிறது. மேலும் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் சொல்லி வருவதால் அதிருப்தி அடைந்த டெல்லி காங்கிரஸ் கட்சியினர் சிலர் திமுக எம்பி கனிமொழி மூலம் ஸ்டாலினுக்கு தூதுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் காங்கிரஸை மீண்டும் கூட்டணிக்குள் சேர்க்க முடியாது என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். நாளை தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் சூழல் வந்தால் திமுக பரிசீலனை செய்ய ஏதுவாக தலைமைக்கு நெருக்கமான காங்கிரஸ் கட்சியினரை டெல்லி தலைமை இவ்வாறு பேச வைத்துள்ளார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    பனையூர் பாபுவை போல் செல்வப்பெருந்தகையும் திமுகவில் இணைந்து செயல்படுவாரா என சத்தியமூர்த்தி பவன் நிர்வாகிகளிடம் கேட்ட போது, செல்வப்பெருந்தகை பேசுவது அவருடைய கருத்து, அவர் தற்போது காங்கிரஸ் தலைவராக இல்லை, எனவே மாணிக்கம் தாகூர் கூறும் கருத்துகளை மட்டும பொருட்படுத்த வேண்டுமே தவிர இவரது கருத்துகளை அல்ல! மேலும் அவர் திமுகவில் இணைவது அவரது விருப்பம். அவர் பக்கா காங்கிரஸ்காரர், அது போல் ஒரு முடிவை எடுக்க மாட்டார் என நிச்சயம் நம்புகிறோம் என்கிறார்கள்.

    English Summary

    Will Selvaperunthagai join in DMK? speculations are going on about this! What is the truth?