அப்பா எங்கனு கேட்டவங்களுக்கு.. Daddy is Homeனு சொல்வோம்.. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த செந்தில் பாலாஜி

  • சென்னை: அப்பாவை எங்க காணோம் என்று கேட்டவர்களுக்கு, Daddy is Home என்று காட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறி இருப்பது தெரிய வந்துள்ளது. 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 5 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் பங்கேற்றனர். சிறந்த வேட்பாளர்களை பரிந்துரை செய்யுமாறு ஸ்டாலின் நிர்வாகிகளிடம் கேட்டு கொண்டார்.

    Advertisement

    இந்த ஆலோசனை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேசிய விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன. அதாவது கரூர் தொகுதி தொடர்பாக ஆலோசித்த போது செந்தில் பாலாஜி, நேரடியாக ஸ்டாலினை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை வைத்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி பேசும் போது, அப்பாவை காணோம் என்று பேசுபவர்களுக்கு, Daddy is Home என்று காட்டுவோம் தலைவரே..

    கரூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால், வெற்றி பெற வைப்பது என்னுடைய பொறுப்பு.. அதிமுக வலுவாக இருந்த தாராபுரத்தில் கூட கூடுதல் வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்துவிட்டோம். நிச்சயமாக கரூரில் வெல்வோம். ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நீங்கள் நேரடியாக போட்டியிட்டால், திமுகவினர் உற்சாகம் அடைவார்கள்.

    Advertisement

    அந்த உற்சாகம் மற்ற 4 தொகுதிகளுக்கும் பரவும். திமுக இன்னும் வலுவடையும் என்று தெரிவித்துள்ளார். இதனை ஸ்டாலின் அமைதியாக கேட்டு கொண்டுள்ளார். செந்தில் பாலாஜியின் இந்த பேச்சு ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இல்லை என்று விவரம் அறிந்தவர்காள் கூறுகிறார்கள்.

    அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி இவ்வளவு உற்சாகமாக பேசுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. அதாவது கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையில் மோதல் வெடித்துள்ளது. அதிருப்தியில் இருக்கும் மதியழகன், நேரடியாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வேலையை தொடங்கிவிட்டார்.

    Advertisement

    இதனால் தவெக வாக்குகள் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளன. அதேபோல் கரூர் இடைத்தேர்தல் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டு, திமுகவை வெற்றி பெற வைத்தால், அது கட்சியில் தனக்கான இடத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கணக்கு போடுவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    Will Show Them Daddy Is Home, Senthil Balaji High-Voltage Remark to Stalin at DMK Bypoll Meet