அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்

  • சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருபதியால் இரு அணி​களாகப் பிரிந்து செயல்​பட்​டு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்​றாக இணைந்​தனர். தகுதி நீக்​கம் கோரி சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் அளித்த கடிதங்​களைத் திரும்​பப் பெறு​வ​தாக​வும் நேற்று கடிதம் அளித்தனர். இந்த கடிதங்களை ஆய்வு செய்து இன்று முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. 47 இடங்களை மட்டுமே வென்று அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்ததால் அக்கட்சிக்குள் மீண்டும் கருத்து வேறுபாடு எழுந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.

    Advertisement

    சட்டமன்றத்திலும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் சிவி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அதிமுகவின் இரு அணிகளும் கொறடா நியமனம் செய்து தனித்தனியே கொறடா உத்தரவை பிறப்பித்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தது. எடப்பாடி பழனிசமி தரப்பை சேர்ந்த கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.

    கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இரு தரப்பும் தனித்தனியாக மனு அளித்தனர். இதற்கிடையே விஜய் கேபினட்டில் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்த எஸ்பி வேலுமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர்.

    Advertisement

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தனர். அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த எஸ்பி வேலுமணி தரப்பு எடப்பாடியுடன் சமாதானமாக செல்ல முடிவு செய்தது. இதன்படி, கடந்த சில நாட்களாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று எடப்பாடி பழனிசாமியை எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்தனர். தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மட்டுமே இருந்ததாகவும், பிளவு இல்லை எனவும் எஸ்பி வேலுமணி கூறினார்.

    இதைத்தொடர்ந்து இரு தரப்பாக சபாநாயகரிடம் அளித்த மனுக்களை நேற்று வாபஸ் பெற்றனர். இந்த நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் அளித்த மனுக்கள் தொடர்பாக இன்று தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:-

    Advertisement

    தகுதி நீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்தவர்களும் மனு அளித்து இருக்கிறார்கள். அவற்றை படித்து பார்த்து ஆய்வு செய்து வியாழக்கிழை முறையாக அறிவிப்பை வெளியிடுவேன்" என்றார். அதிமுகவின் வாபஸ் மனுக்களை ஏற்றுக்கொண்டு யார் மீதும் எந்த நடவடிக்கையையும் சபாநாயகர் எடுக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.

    இதற்கிடையே, சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்திக்க மறுத்துவிட்டார். சிவி சண்முகத்தை சமாதானம் செய்ய எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். ஆனாலும் அந்த சமாதானத்தை சிவி சண்முகம் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் சிவி சண்முகம் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா? என்ற பரபரப்பும் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    English Summary

    AIADMK MLAs who had split into two factions over dissatisfaction against Edappadi Palaniswami have now reunited. The Speaker is expected to announce his decision today after reviewing the withdrawal letters submitted regarding the earlier disqualification petitions against each other.