“அப்பா மிக விரைவில் சட்டமன்றம் வருவார்”.. இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?.. பற்ற வைத்த கே.என்.நேரு


  • சென்னை: "அப்பாவைக் காணோம்" என்று தமிழக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் கேலி செய்து பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், "சீக்கிரமே வந்துவிடுவார் உள்ளே" என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஎன் நேருவின் பேச்சு இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை ஆற்றிப் பேசினார். அப்போது சட்டமன்றத்தில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் குறிப்பிடும் வகையில், "அப்பாவைக் காணோம்" என்று முதலமைச்சர் விஜய் கேலி செய்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த பிறகு அவையில் தனது பேச்சைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், இறுதியாக தனது பாணியில் ஒரு குட்டிக்கதை சொன்னார். "கடும் வெயிலில் முதியவர் ஒருவர் தனது நெற்றியில் கையை வைத்துக்கொண்டு ஏதோ ஒன்றை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார். அதைச் சற்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், 'பெரியவரே, அப்படி என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டான்.

    அதற்கு அந்த முதியவர், 'எங்கப்பா... உங்க அப்பாவைக் காணோம்?' என்று கேட்டாராம்." என்றார் விஜய். இக்கதையைச் சொல்லி முடித்த முதல்வர் விஜய், தற்போதைய எதிர்க்கட்சிகளைப் போலத் தானும் இதுபோன்று சம்பந்தமில்லாத கதைகளைச் சொல்ல முடியும் என்று மறைமுகமாக அவர்களை கிண்டல் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது குறித்தும் கிண்டல் செய்திருந்தார் விஜய்.

    Advertisement

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக விவசாயத் தொழிலாளர் அணித் துணைத் தலைவர் விராலிமலை சந்திரசேகரன் தாயார் மறைந்த பச்சையம்மாள் படத் திறப்பு நிகழ்வு புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கேஎன் நேரு, ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்வில் கே.என்.நேரு பேசுகையில், "நம்முடைய தலைவரைப் பார்த்துக் கேட்கிறார், 'உங்க அப்பாவைக் காணோம்?' என்று. வருவார், சீக்கிரமே வந்துவிடுவார் உள்ளே. அதுதான் எங்களால் சொல்ல முடியும். எவ்வளவு விரைவாக அவர் வர வேண்டுமோ, சட்டமன்றத்தில் வந்து மீண்டும் பொறுப்பேற்பார், அது உறுதி.

    நேற்று வரைக்கும் கம்முனு இருந்தான் கட்சிக்காரன். எப்போது இப்படிப் பேசினாரோ அதிலிருந்து கிளம்பி உட்கார்ந்துட்டான் எல்லா ஆளுகளும்... தமிழ்நாடு முழுவதும் கட்சிக்காரன் எழுந்து உட்கார்ந்துட்டான்..." என்று கூறியுள்ளார் கேஎன் நேரு.

    Advertisement

    இதன்மூலம் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற யூகங்கள் வலுத்துள்ளன. ஸ்டாலின், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    While Tamil Nadu Chief Minister Vijay’s taunt in the Assembly—asking "Where is your father?"—caused a stir, former DMK Minister KN Nehru’s remark that "he will soon come inside" has sparked a sensation. KN Nehru’s statement has fueled speculation about whether DMK leader Stalin will contest the by-election.