ஆவணங்கள் இல்லாத மசூதி, சர்ச்சுகளுக்கு பட்டா! அரசு நிலத்தை வழங்குகிறதா தமிழக அரசு? பாஜக எதிர்ப்பு ஏன்

  • சென்னை: நில உரிமை ஆவணங்கள் இல்லாத மசூதிகள், தேவாலயங்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.. தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜகவும், இந்து முன்னணியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்ன? அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை என்ன?

    Advertisement

    தமிழகத்தில் 25 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நில உரிமை ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அரசு நிலப்பட்டா

    செய்தியாளர்களிடம் பேசிய ஷாஜகான், "தமிழகத்தில் நீண்ட காலமாக நில உரிமை ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 25 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வழிபாட்டுத் தலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் கே. செங்கோட்டையனிடம் பேசியபோது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, தகுதியானவற்றுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.. எனவே இதற்கான ஆவணப் பணிகள் விரைவில் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சொத்துரிமை ஆவணங்கள் - மசூதி, சர்ச்

    இந்நிலையில், சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத, மசூதி, சர்ச்களுக்கு, நிலப்பட்டா வழங்க, தவெக அரசு திட்டமிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..

    அதில், "எவ்வித சொத்துரிமை ஆவணங்களும் இல்லாத, ஆயிரக்கணக்கான மசூதிகள், சர்ச்சுகளுக்கு, நிலப்பட்டா வழங்குவதாக, த.வெ.க., அரசு அறிவித்துள்ளது. இது, அரசியலமைப்பு சட்டத்தின், அனைத்து எல்லைகளையும் மீறும் செயல். ஓட்டுக்காக, சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக, சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்களிடமே அரசு நிலங்களை தாரைவார்ப்பது, திட்டமிட்ட மதவாத செயல்.

    Advertisement

    இந்த சட்ட விரோத கட்டடங்கள், எவ்வித ஆவணங்களும் இல்லாமல், 25 முதல் 50 ஆண்டுகளாக செயல்படுவதாக, சிறுபான்மை நலத்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.

    அரசு நிலங்கள்

    நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ், அவர்களை வெளியேற்றுவதற்கு பதிலாக, நிலத்தின் உரிமையை பரிசாக வழங்க, த.வெ.க., அரசு தயாராகி வருகிறது. பொதுச்சொத்துகளில் உள்ள, அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகளை; கோவில், மசூதி, சர்ச் என எதுவாக இருந்தாலும் அகற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்துள்ளன.

    கோவில் நிலங்களை மீட்கும்போது, பொது நிலங்களில் உள்ள ஹிந்து மத கட்டமைப்புகளுக்கு, வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சிறுபான்மையின மதத்தவரின் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மட்டும் பட்டா வழங்க, தவெக அரசு முன்வருவது, கடும் கண்டனத்திற்குரியது" என்று அதில் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்து முன்னணி கண்டனம்

    அதேபோல, இந்து முன்னணியும் அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "மசூதிகள், சர்ச்சுகளுக்கு, உரிய சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நிலப்பட்டா வழங்குவதாக தவெக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, பல பகுதிகளில், சட்ட விரோதமாக வழிபாட்டு தலங்கள் கட்டப்படுவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    அரசு நிலங்களை, ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது எந்த வகையில் நியாயம்? ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், கட்டடங்களை அகற்றவும் நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளன.

    Advertisement

    ஓட்டு வங்கி அரசியல்

    அரசு நிலங்களில், ஹிந்து கோவில்கள் இருந்தால் அகற்றப்படும் நிலையில், மசூதிகள், சர்ச்சுகளுக்கு மட்டும் பட்டா வழங்குவது பாரபட்சமானது. ஏற்கனவே, வக்ப் சொத்து தொடர்பான பிரச்சனைகளால் கரூர் மாவட்டம் திருச்செந்துறை, ஈரோடு மாவட்டம் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உரிய ஆவணங்கள் இன்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கும் அறிவிப்பு ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஓட்டு வங்கி அரசியலுக்காக வெளியிடப்பட்ட இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    English Summary

    Will Tamil Nadu Grant Pattas to Mosques, Churches Without Land Documents? Why Is BJP Opposing It