டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு!

  • சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவிடப்பட்டன.

    Advertisement

    ஆனால் இதில் பல டாஸ்மாக் சொன்னபடி மூடப்படவில்லை. பல 100 மீட்டர் இடம் மாற்றப்பட்டது. பல இடங்களில் தனியார் பார்கள் திறக்கப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தனியார்மயமாக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து பரபரப்புத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

    Advertisement

    இந்த யூகங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகக் கருதுகின்றனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் நீண்டகாலமாக தொடரும் பல்வேறு சிக்கல்களே இந்த முடிவுக்கு வழிவகுக்கும் என்பது தெரிவிக்கப்படுகிறது.

    முக்கியக் காரணங்களில் ஒன்று டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டங்கள். அண்மைக் காலமாக ஊழியர்கள் எதிர்கொள்ளும் அதிக பணிச்சுமை, காலிப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், மற்ற மாநிலங்களை விடக் குறைவான சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    Advertisement

    மேலும், மதுபானங்களின் MRP விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படும் முறைகேடுகள் தொடர்ந்து வருகின்றன. கடை வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் இந்த முறைகேடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனைத் தனியார் வசம் ஒப்படைத்தால் நிர்வாக சுமை குறையும் என அரசு நினைக்கலாம் என்கின்றனர்.

    மற்றொரு முக்கிய காரணம் வருவாய் இழப்பு. 717 கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிக்க, மது விற்பனையின் லாபத்தை நிர்வாக சிக்கல்கள் இன்றி தக்கவைக்க PPP மாடல் (Public-Private Partnership) ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    எத்தகைய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?

    தற்போதைய ஊகங்களின்படி, மதுபான மொத்த கொள்முதலை அரசே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்களை ஏலம் மூலம் தனியாருக்கு வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். உரிமம் (Licensing) அடிப்படையில் செயல்படும் இந்த மாடல் ஏற்கனவே ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இதே மாதிரியான முயற்சியை சில உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், இது இன்னும் உத்தேச யூகமே. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனாலும் இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருவதால் டாஸ்மாக்கில் பணியாற்றும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

    Advertisement

    தனியார்மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் தங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மறுபுறம், அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் வருவாய் அதிகரிப்புக்கான இந்த முயற்சி எதிர்காலத்தில் சாத்தியமாகலாம் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

    கோட்டை வட்டாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தமிழக அரசு சமூகப் பொறுப்புடன் நிர்வாக திறனையும் சமநிலைப்படுத்தி எடுக்கும் முடிவுகள் மாநிலத்தின் பொருளாதாரத்திலும், சமூக அமைப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Will TASMAC Shops and Bars in Tamil Nadu be Privatised? Big Rumours from Secretariat!