சென்னை: சென்னையின் அதிகார மையமாக இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில்தான் இந்தக் கட்டிடம் அமையப்போகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம், நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம் என கடற்கரையை ஒட்டியுள்ள 9 மீனவ கிராமங்கள் பல தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வருகின்றன. அரசு தனது சொந்த நிலத்தில் கட்டினாலும், அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், வீடுகள் மற்றும் மீன் விற்பனை என்னவாகும் என்பது குறித்த எளிய அலசல் இதோ.
மெரினா லூப் சாலையில் தினமும் அதிகாலையிலேயே படகுகளிலிருந்து கடலுக்குச் சென்று பிடித்த புதிய மீன்களை பெண்கள் சாலையோரக் கடைகளில் வைத்து விற்பனை செய்வது வழக்கம். சென்னை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து மீன் வாங்கிச் செல்கிறார்கள். தலைமைச் செயலகம் இங்கு வந்துவிட்டால், முதலமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் வந்து செல்லும் மிக முக்கியமான பகுதியாக இது மாறும். அரசு விதிக்கும் பாதுகாப்பு வளையங்கள் மற்றும் வி.ஐ.பி வாகனப் போக்குவரத்து காரணமாக, லூப் சாலையில் பொதுமக்கள் தாராளமாக வந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மீன் வாங்க வரும் வழக்கமான வாடிக்கையாளர்களின் வருகை குறையும். ஏற்கனவே மாநகராட்சி கட்டிய நவீன மீன் அங்காடியில் போதிய இடவசதியும் வியாபாரமும் இல்லை என மீனவர்கள் தவித்து வரும் நிலையில், சாலைகளில் முற்றிலும் வியாபாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டால் மீனவப் பெண்களின் அன்றாட வருமானம் அடியோடு முடங்கும் சூழல் உருவாகும். அரசு தன் வசம் உள்ள 21 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலத்தில்தான் கட்டுமானங்களை மேற்கொள்கிறது என்றாலும், மீனவர்கள் அஞ்சுவது அதன் பின்விளைவுகளைத்தான். தலைமைச் செயலகம் போன்ற அதிமுக்கிய அரசு அலுவலகத்தைச் சுற்றி 'சிவப்பு மண்டலம்' அல்லது உச்சகட்ட பாதுகாப்பு வளையம் அமல்படுத்தப்படும். அப்படி பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, செயலகத்தின் சுற்றுப்புறத்தில் இருக்கும் குடிசைகள், தற்காலிக வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் மீனவர்களின் குடியிருப்புகளை மெல்ல மெல்ல அப்புறப்படுத்த அழுத்தம் தரப்படலாம். குறிப்பாக கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, அப்பகுதி மக்களைக் கண்ணகி நகர் அல்லது பெரும்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றிவிடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஆழமாக எழுந்துள்ளது. மீனவர்களுக்குக் கடல் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல.. அவர்களது வீட்டின் கொல்லைப்புறம் போன்றது. படகுகளைக் கரையேற்றுவது, வலைகளைப் பழுதுபார்ப்பது, கருவாடு காயவைப்பது என கடற்கரை மணல் பரப்புதான் அவர்களின் வாழ்விடம். தலைமைச் செயலகம் மற்றும் அதையொட்டி வரவுள்ள புதிய உயர்மட்ட மேம்பாலம், அகலமான சாலைகள் போன்ற திட்டங்களால் கடற்கரைக்கான பாதை அடைக்கப்படலாம். பாதுகாப்பு கெடுபிடிகளால் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் தாராளமாக வைக்க முடியாமல் போனால், அவர்களின் பாரம்பரிய உரிமையே பறிபோய்விடும். அரசு திட்டங்களை அறிவிக்கும்போது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்தாலும், நடைமுறையில் வி.ஐ.பி பாதுகாப்பு விதிகளே எப்போதும் முன்னுரிமை பெறுகின்றன. பட்டினப்பாக்கத்தில் புதிய அதிகார மையம் உருவாவதால், காலங்காலமாக கடலோடு வாழ்ந்துவரும் அடித்தட்டு மீனவர்கள் தங்கள் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தள்ளப்படுவார்களா அல்லது அரசு அவர்களின் பாரம்பரிய உரிமைகளுக்கு முழு உத்தரவாதம் தருமா என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.மீன் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்படுமா?
பாதுகாப்புக் காரணங்களால் வீடுகள் அகற்றப்படுமா?
கடலுக்குச் செல்லும் வழியும் படகு நிறுத்துமிடமும் மாறுமா?