தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா? - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

  • சென்னை: விசிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பனையூர் பாபுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். ஆட்சி 6 மாதம் அல்ல, 3 மாதமாவது நீடிக்குமா என்ற சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். மேலும், 6 மாதம் எதுவும் பேச மாட்டோம் என சொல்லியிருந்தோம், ஆனால் அதற்கு முன்பே பேசக்கூடிய சூழல் வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement


    விசிக செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான பனையூர் பாபு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளி செங்கோலை பனையூர் பாபு வழங்கினார். இவரும் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதன் பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:-

    Advertisement

    பனையூர் பாபு திமுகவில் இணைந்தார்

    செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு உள்ளிட்ட உங்கள் எல்லாரையும் வருக.. வருக.. என வரவேற்க கடமைப்பட்டு உள்ளேன். பனையூர் பாபுவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திற்கு வரும் போது அமைதியாக வருவார், போவார். ஆனால் சட்டமன்றத்தில் எழுந்து பேசும்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், தனது தொகுதி பிரச்சினைகளையும் வலியுறுத்தி பேசுவார். ஒரு கொள்கைவாதியாக, லட்சியவாதியாக, ஒரு போராளியாக தனது கருத்துக்களை முன்வைத்து பேசக் கூடியவர்.

    ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறபோதோ, மற்றொரு இயக்கத்தில் சேருகின்ற போதோ ஒரு சில கொஞ்சம் கொஞ்சம் விமர்சனம் செய்து, ஏன் தரந்தாழ்ந்து கூட பேசுகிற அந்த பாணியை பார்த்திருக்கிறோம். ஆனால் பனையூர் பாபு அப்படி கிடையாது. அரசியல் மாறுபாடுகளையும், வேறுபாடுகளையும் அடக்கத்துடன் சுட்டிக்காட்டி ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட அந்த செய்தியை படித்திருப்பீர்கள். நானும் படித்தேன். அப்படி வெளியிட்ட அந்த செய்தியில் யாரும் புண்படும் வகையில் எந்த விமர்சனமும் இல்லை.

    Advertisement

    3 மாசம் கூட தாங்காது

    தொகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றி கொடுத்தவர் பனையூர் பாபு. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றினோம். தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்கு தயாராக நாங்கள் இருக்கிறோம் என்று நமக்கு துணையாக வந்து சேர்ந்துள்ள பாபுவை வரவேற்கிறேன். நீங்கள் ஏற்கனவே இருந்த இயக்கத்தை பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சித்து பேச வேண்டிய தேவையில்லை.

    6 மாதம் எதுவும் பேச மாட்டோம் என சொல்லியிருந்தோம், ஆனால் அதற்கு முன்பே பேசக்கூடிய சூழல் வந்துவிட்டது. இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சியை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. 6 மாதம் இல்லை.. 5 மாதம் இல்லை.. 3 மாதமாவது இந்த ஆட்சி தாங்குமா என்ற கேள்விக்குறியோடு தான் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. என்று கூறினார்.

    English Summary

    MK Stalin criticised the ruling TVK government during an event welcoming Panaiyur Babu into the DMK. Stalin said that although the opposition had initially decided not to criticise the government for six months, the current situation had forced them to speak out earlier. He also questioned whether the TVK government would last even three months and praised Panaiyur Babu as a leader committed to ideology and principles.