இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? அமைச்சர் வன்னியரசு பதில்

  • சென்னை: இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வன்னியரசு, எல்லாமே முதல்வர் விஜய் எடுக்கக் கூடிய முடிவு, கலந்து பேசி தான் முடிவு எடுப்பார்கள். இந்த அமைச்சரவையில் ஒரு கூட்டணியாக நாங்கள் சேர்ந்திருக்கிறோம்; அமைச்சரவையில் மாற்றம் என்பது குறித்து எங்களிடம் ஆலோசனை செய்வதோ, அது மாதிரியான முன்னெடுப்புகள் எடுப்பதில்லை , முதலமைச்சர் தலைமையில் அவர்கள் எடுக்கக்கூடிய முடிவு எனவே இதில் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

    Advertisement

    சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் 'பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி மாநாடு' நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு, பல்வேறு முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

    Advertisement

    மகளிர் விழிப்புணர்வு மற்றும் பாலின நீதி

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அடக்குமுறை மற்றும் பாலின பாகுபாட்டைத் தடுப்பதற்கு விரிவான விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் 'சிங்கப்பெண்' திட்டத்தின் கீழ், மகளிர் விழிப்புணர்வுக்காக 11 முக்கியத் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன்" என்று தெரிவித்தார்.

    அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு...

    இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அமைச்சரவை மாற்றம் என்பது முற்றிலும் முதலமைச்சர் எடுக்கக்கூடிய முடிவு. இந்த ஆட்சியில் ஒரு கூட்டணியாக நாங்கள் அங்கமாக இருக்கிறோம். அமைச்சரவை மாற்றம் குறித்து எங்களோடு ஆலோசனை செய்வதோ அல்லது அதுபோன்ற முன்னெடுப்புகளை எடுப்பதோ இல்லை. இது முதலமைச்சர் தலைமையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்பதால், இதில் எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

    Advertisement

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் பிற்போக்கானதா?

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பிற்போக்கானது" என்ற விமர்சனம் குறித்துக் கேட்டபோது, "கிராமப்புறங்களில் இன்னமும் ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாத ஏழை எளிய குடும்பங்கள் பல உள்ளன. எனவே, இத்திட்டம் நிச்சயமாகப் பிற்போக்கானது அல்ல. மாறாக, பொருளாதார ரீதியாக அந்த எளிய குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் மற்றும் ஆதரவு" என விளக்கமளித்தார்.

    புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த கேள்விக்கு...

    "அம்பேத்கர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு மட்டும் உரியவர் அல்லர்; அவர் இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும் அனைத்து மக்களுக்குமான பொதுவானத் தலைவர்" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் வன்னி அரசு, "இன்றைக்கு யார் போராட்டம் நடத்தினாலும் அம்பேத்கர் புகைப்படம் இல்லாமல் போராட்டம் நடைபெறுவதில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கி, சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கும் நடுநாயகமாக அம்பேத்கர் விளங்குகிறார். அவரது கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அம்பேத்கர் படத்தை வெறும் படமாகப் பார்க்கக் கூடாது; அதை ஒரு பாதுகாப்பாகப் பார்க்க வேண்டும். அம்பேத்கர் என்பது வெறும் படம் அல்ல, அது கோட்பாடுகள் அடங்கிய ஒரு தொகுப்பு" எனக் கூறினார்.

    Advertisement

    மாணவர் விடுதிகளில் உணவுத் தரம் & வசதிகள்

    மாணவர் விடுதிகளில் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து எழும் புகார்கள் தொடர்பாகப் பேசியவர், "கடந்த காலத்தை விட இந்த முறை எங்களது துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மாணவர் நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. விடுதி மாணவர்களுக்கான உணவு நிதியை உயர்த்தி, பள்ளிகளுக்கு ₹1,400-லிருந்து ₹1,800 ஆகவும், கல்லூரிகளுக்கு ₹1,500-லிருந்து ₹2,000 ஆகவும் மாற்றியமைத்துள்ளோம். உணவில் யாராவது முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் நலனில் அலட்சியமாகச் செயல்படும் விடுதி காப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

    Advertisement

    சேலத்தில் அம்பேத்கர் சிலை திறப்பதில் தாமதம் ஏன்?

    சேலத்தில் அம்பேத்கர் சிலை திறப்பது குறித்த கேள்விக்கு, "அதற்கான செயல்பாடுகளை விரைந்து முன்னெடுத்து வருகிறோம்; விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்று தெரிவித்தார்.

    வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவு குறித்து...

    வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, "மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணிதான் இந்தத் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    English Summary

    Responding to the question of whether there would be a cabinet reshuffle following the by-election results, Minister Vanniyarasu stated that the decision rests entirely with Chief Minister Vijay, noting that the decision would be made after consultation.