சென்னை: அமமுக பொதுச் செயலாளர் தினகரனுக்கு அதிமுக இணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க தினகரன் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பஞ்சாயத்துக்கள் ஏற்பட்டன. அதிமுகவில் இருந்து தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்த நிலையில் படுதோல்வி அடைந்தது. இதனால் ஏற்கெனவே பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வலியுறுத்தி, கடைசியில் அவர்களும் மாற்று கட்சிகளில் இணைந்துவிட்டனர். அதில் செங்கோட்டையன் அமைச்சராகிவிட்டார், மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் திமுக எம்எல்ஏவாகிவிட்டார். இந்த நிலையில் தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்கவே முடியாது என எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடித்து வந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்ததால் அந்த தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என கூறி சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனித்து செயல்பட்டு வந்தனர். இதனால் பலரது மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டார். எனினும் எஸ்.பி.வேலுமணியை சமாதானப்படுத்தி அவருக்கு இணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட நிலையிலும் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவியே வேண்டும் என கேட்டு அடம்பிடிப்பதாக சொல்லப்படுகிறது. தினமும் அதிமுகவில் யார் எந்த பக்கம் செல்வார்கள் என்ற பதைபதைப்புடனே இருக்க வேண்டிய சூழலில் எஸ்.பி.வேலுமணியும் நத்தம் விஸ்வநாதனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என கூட்டறிக்கை விடப்பட்டது. நாளுக்கு நாள் அதிமுக வீக்காகி வருவதால் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவையும் தினகரனையும் சேர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதிலும் அதிமுக, பாஜக கூட்டணியில் அமமுகவும் அங்கம் வகிக்கிறது. தற்போது தினகரனும் எடப்பாடியும் நெருக்கமாகிவிட்டனர். இதனால் அதிமுகவை வலுப்படுத்த இவர்கள் இருவரையும் சேர்க்கலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லாவிட்டாலும் அதிமுக மேலும் உடைந்துவிடக் கூடாது, தனது பதவி ஒன்னுமில்லாமல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் நிர்வாகிகளின் கோரிக்கைக்கு கட்டுப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா, சிறைக்கு சென்ற போது, தனது அக்காள் மகன் டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக்கிவிட்டு சென்றார். இதனால் தற்போது தினகரனுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் தனக்கு வழங்கப்படும் பதவி வலுவானதாகவும் முடிவுகளை எடுக்க அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தினகரன் தெளிவாக உள்ளாராம். அது போல் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அது போல் அமமுகவில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் நல்ல பதவிகளை கொடுக்குமாறு தினகரன் வலியுறுத்தி வருகிறாராம். அது போல் புதிதாக கட்சி ஆரம்பித்த சசிகலாவையும் அதிமுகவில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இவையெல்லாம் அதிகாரப்பூர்வமானதல்ல, அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்களே ஆகும். இந்த தகவல்களுடன் எடப்பாடி பழனிசாமியோ தினகரனோ, சசிகலாவோ மாறுபாடான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கலாம்.