தவெக வாஷ் அவுட்டா? 5-10% ஓட்டு வங்கி விஜய்க்கு..திமுகவை வீழ்த்துவது அவ்வளவு ஈஸியா.. அய்யநாதன் நறுக்

  • சென்னை: "இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, திமுக அரசு மீது மக்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு இறுக்கமோ அல்லது அதிருப்தியோ ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, கட்சி மாறியவர்களை மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்திய கட்சிகளின் நிலைப்பாட்டையே மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். மின்கட்டண உயர்வு மற்றும் பிற அழுத்தங்கள் இருப்பதாகக் கூறினாலும், தவெக போன்ற கட்சிகள் வழங்கும் பணப் பலமும் பொய் மூட்டைகளுமே அவர்களின் பிரதானமாக உள்ளன" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

    Advertisement

    ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "எஸ்ஐஆர் வந்தபோது தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். அதில் 50 லட்சம் பேர் பெண்கள். அதிலும் பெரும்பான்மையானவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள்.

    Advertisement

    ஆனால், எந்தவொரு உயர் வகுப்புப் பகுதியிலிருந்தோ, பிராமணத் தெருக்களிலிருந்தோ அல்லது பெரிய உன்னதமான பிளாட்டுகளில் இருந்தோ வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டதாக எந்தக் கூக்குரலும் வரவில்லை.

    மகளிர் உரிமைத்தொகை

    மகளிர் உரிமைத்தொகை பெறுகிற பெண்கள் அதிகமுள்ள பகுதிகளில் இந்த நீக்கம் நடந்திருக்கிறது. இதை அப்போதே உதயநிதி ஸ்டாலினிடம் நான் எடுத்து சொன்னேன். இதெல்லாம் நம்முடைய ஓட்டு என்று சுட்டிக்காட்டினேன்.

    நீக்கப்பட்ட 74 லட்சம் பேரில் குறைந்தது 50 லட்சம் பேராவது வாக்களித்திருந்தால், இன்று விஜய் எதிர்க்கட்சியாகக் கூட இருந்திருக்க முடியாது, அவர் கட்சியே இழந்திருக்கக்கூடும். நீக்கப்பட்டவர்கள் வாக்களித்திருந்தால் எல்லாம் வாஷ் அவுட் ஆகியிருக்கும். அவ்வளவு பலமான ஒரு கட்சி திமுக. அதற்கடுத்து அதிமுக செயல்படுகிறது.

    Advertisement

    பாஜக - ஈவிஎம் மிஷின்

    இதில்தான் பாஜக மற்றும் பிற சக்திகள் எப்படி விளையாடுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஐயா எம்.ஜி. தேவசகாயம் சொன்னது போல, முன்பு ஈ.வி.எம் இயந்திரங்களை வைத்துச் சூழ்ச்சி செய்தவர்கள், இப்போது வாக்காளர் பட்டியலையே காலி செய்யும் புதிய முறையைக் கையிலெடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு போலவே மேற்கு வங்கத்தில் 91 லட்சம், பீகாரில் 65 லட்சம், கர்நாடகாவில் 1 கோடிக்கும் மேல், மகாராஷ்டிராவில் 2 கோடி என நாடு முழுவதும் நீக்கம் திட்டமிட்டு நடந்துள்ளது. கேரளாவில் மட்டும் விழிப்புணர்வு மற்றும் உறுதியான அரசியல் சூழல் காரணமாக அவர்களால் பெரியளவில் கைவரிசை காட்ட முடியவில்லை.

    Advertisement

    திமுக ஆட்சி - வலுவான கோட்டை

    ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறை வாக்காளர் பட்டியல் நீக்கம் மற்றும் ஈ.வி.எம் மோசடி குற்றச்சாட்டுகள் ஆகிய இரண்டும் சேர்ந்தே வேலை செய்துள்ளன. கடந்த கால திமுக ஆட்சி மக்களுக்கு ஒரு பெரும் ஆறுதலையும் பாதுகாப்பையும் அளித்தது.. நம் முதலமைச்சர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் அப்போது இருந்தது. அப்படிப்பட்ட வலுவான கோட்டையான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் திமுகவை சாதாரணமான முறையில் வீழ்த்துவது சாத்தியமே கிடையாது.

    கொங்கு மண்டலத்தில் வேண்டுமானால் அதிமுகவோ அல்லது மற்றவர்களோ வெல்லலாம், ஆனால் இந்த மோசடிகளைத் தாண்டி தவெக போன்ற கட்சிகள் எப்படி ஜெயிக்க முடியும்? நடந்து முடித்த பொதுத்தேர்தல் முழுக்க முழுக்க மோசடிக்கு தலைவணங்கிய ஒரு தேர்தலாகும்.

    Advertisement

    கௌரி லங்கேஷ் - பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ் ஏன் அரசியலில் இவ்வளவு தீவிரமாக களத்தில் இறங்குகிறார்? வசதியான வாழ்க்கை இருக்கிறது. பட மார்க்கெட் இருக்கிறது. ஆனாலும் தெருத்தெருவாக நின்று பேசுகிறார். கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் தவறான விஷயங்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போராடுகிறார்.

    இன்றைய இளைஞர்கள் இதை உணராமல் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள். சவர்ணா இந்து ராஷ்டிராவை உருவாக்கும் ஆபத்தான போக்கு நிலவுவதை நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பிரபாகரன் கூட வெளிப்படையாகப் பேசினார். இவ்வளவு பெரிய ஆபத்து நாட்டைச் சூழ்ந்துள்ளது.

    Advertisement

    தவெக வாக்கு வங்கி

    தவெகவைப் பொறுத்தவரைக்கும் விஜய்க்கு ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அரசியலில் அவர் எடுத்த சில முடிவுகள் அவருடைய பாதையைத் தவறான திசைக்கு கொண்டு போகின்றன.. எம்.ஜி.ஆர் போல ஒரு நேர்த்தியான அரசியல் பாதையை விஜய் தேர்ந்தெடுக்கவில்லை.. திருமாவளவன் போன்றவர்களிடம் கூட்டணி ரீதியாக நடந்துகொண்ட விதமும் இதில் முக்கியம். ஒரு கூட்டணி தேவைப்பட்டதால் எல்லாருடைய கையையும் பிடித்து நிற்க முடியாது. அரசியலில் யாருடன் நிற்கிறோம் என்பதும் முக்கியம்.

    அதேபோல இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, திமுக அரசு மீது மக்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு இறுக்கமோ அல்லது அதிருப்தியோ ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, கட்சி மாறியவர்களை மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்திய கட்சிகளின் நிலைப்பாட்டையே மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். மின்கட்டண உயர்வு மற்றும் பிற அழுத்தங்கள் இருப்பதாகக் கூறினாலும், தவெக போன்ற கட்சிகள் வழங்கும் பணப் பலமும் பொய் மூட்டைகளுமே அவர்களின் பிரதானமாக உள்ளன.

    இடைத்தேர்தல் ரிசல்ட்

    மக்களிடம் சினிமாப் புகழை வைத்து மட்டுமே வாக்குகளைப் பெற முடியும் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால், உண்மையான மக்கள் ஆதரவு என்பது பணத்தால் வாங்குவதல்ல.

    ஒருவேளை இந்த வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, அந்த எஸ்.ஐ.ஆர் முறைகள் சரி செய்யப்பட்டு பழைய, உண்மையான வாக்காளர் பட்டியல் நடைமுறைக்கு வந்தால், முறைகேடுகள் செய்ய முடியாது.

    அப்படிப்பட்ட நியாயமான தேர்தல் நடக்கும் பட்சத்தில், முறையான மக்கள் பலம் இல்லாத தவெக போன்ற கட்சிகளால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது.. அவர்கள் அரசியலில் இருந்து வாஷ்-அவுட் (Washout) ஆகிவிடுவார்கள்.

    திமுக கடந்த காலங்களில் கடுமையாக உழைத்துள்ளது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து களத்தில் ஆற்றிய பணிகள் பலமானவை. எனவே, பண பலமும் மோசடிகளும் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் விழிப்புணர்வும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Will TVK Be Washed Out? 5-10% Vote Bank for Vijay.. Is Defeating DMK Really That Easy?