Reelection: தவெக ஆட்சிக்கு ஆயுசு எவ்வளவு? ஸ்டாலின் கையில் எடுக்கும் 6! விஜய் போடும் 7 மேஜிக் கணக்கு!

  • சென்னை: தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமை பெறுமா இல்லை ஸ்டாலின் சொன்னது போல் தேர்தல் வருமா என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படியே இரண்டுக்கும் வாய்ப்பிருப்பதாக வைத்துக் கொண்டால் என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026ம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரியணை ஏறியுள்ளார். எனினும், "இந்த ஆட்சி ஒரு நீர்க்குமிழி; இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஒரு தேர்தலைத் தமிழகம் சந்திக்கும்" என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கை, அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    அந்த வகையில் விஜய்யின் 'வெற்றிப் பயணம்' ஐந்து ஆண்டுகளை எட்டுமா அல்லது ஸ்டாலினின் 'கணிப்பு' பலிக்குமா? என்பதை பார்க்கலாம்.

    விஜய் ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடித்திருக்க முக்கிய காரணங்கள்

    1. தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த தவெக: சட்டசபையில் 107 இடங்களைக் கைப்பற்றி, மிகப்பெரிய கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆட்சிக்குத் தேவையான மேஜிக் நம்பரை எட்ட காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் போன்ற தோழமைக் கட்சிகளின் கரம் கோர்த்திருப்பதோடு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து சில சட்டசபை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவின் பக்கம் சாயத் தொடங்கியிருப்பது விஜய்யின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது.

    Advertisement

    2. மாற்றத்தை விரும்பிய மக்கள்: இது வெறும் தேர்தல் வெற்றியல்ல; திராவிட அரசியலுக்கு மாற்றாக மக்கள், தவெகவுக்கு வழங்கிய மாபெரும் அங்கீகாரம். இந்த அரசைத் தொடக்கத்திலேயே கவிழ்க்க நினைத்தால், அது மக்களின் தீர்ப்புக்கு எதிரான செயலாகப் பார்க்கப்படும். இந்த 'மக்கள் ஆதரவு அலை'தான் எதிர்க்கட்சிகளின் வியூகங்களைத் தடுக்கும் அரணாகச் செயல்படுகிறது.

    3. அதிகார வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட சுதந்திரம்: நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருக்காது என்ற விஜய்யின் அதிரடி அறிவிப்பு, அரசு அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    லஞ்சமற்ற வெளிப்படையான நிர்வாகம், ரேஷன் முதல் ஓய்வூதியம் வரை சாமானிய மக்களின் தேவைகளைத் தடையின்றிச் சென்றடையச் செய்வதால், மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு 'நற்பெயர்' கிடைத்துள்ளது.

    Advertisement

    4. சமரசமற்ற சட்டம்-ஒழுங்கு: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் "துளிக்கூட சமரசம் இல்லை" என்ற முதல்வரின் கண்டிப்பான அணுகுமுறை, பொதுமக்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. சாதி, மத மோதல்களுக்கு இடமளிக்காத இரும்புக்கரம் கொண்ட நிர்வாகம் அமையும் பட்சத்தில், ஆட்சியை அசைப்பது எவருக்கும் எளிதல்ல.

    5. டெல்லியுடன் இணக்கம்: தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்திய புதிய சக்தியுடன் சுமூகமான உறவைப் பேணவே மத்திய அரசு விரும்பும். எனவே, அரசியல் காரணங்களுக்காக 356-வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும் சூழல் இப்போதைக்குத் தென்படவில்லை. இவ்வாறு பல்வேறு அரசியல் நிபுணர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    ஸ்டாலினின் 'ஆரூடம்' உண்மையாக மாறுமா?

    1. கூட்டணிக் கயிற்றில் ஆடும் ஊசலாட்டம்: தவெகவிடம் தனிப் பெரும்பான்மை (118 இடங்கள்) இல்லை என்பதுதான் அதன் மிகப்பெரிய பலவீனம். 107 இடங்களில் நிற்கும் இந்த அரசு, கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே மூச்சு விடுகிறது. அதிகாரப் பகிர்விலோ அல்லது கொள்கை முடிவுகளிலோ சிறு விரிசல் ஏற்பட்டாலும், ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு ஆட்சி கவிழும் அபாயம் நிழலாடுகிறது.

    2. நிர்வாகப் பயிற்சியின்மை:

    முதல்வர் உட்பட அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் நிர்வாகத்திற்குப் புதியவர்கள். தமிழகத்தின் பிரம்மாண்டமான கடன் சுமை, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு போன்ற சிக்கலான சவால்களைக் கையாளும் அனுபவம் இவர்களுக்குக் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. நிர்வாகத் தடுமாற்றங்கள் ஏற்பட்டால், அதுவே ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமையலாம்.

    Advertisement

    3. நிதி நெருக்கடியும் வாக்குறுதிச் சுமையும்: தேர்தல் களத்தில் அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த மலை போன்ற நிதி தேவை. ஏற்கனவே கஜானா காலியாக உள்ளதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பொருளாதார மேலாண்மையில் சறுக்கல் ஏற்பட்டால், மக்களின் அதிருப்தி அரசியல் ஸ்திரமின்மைக்கு வித்திடும்.

    4. திமுகவின் அசுரத்தனமான கட்டமைப்பு: தேர்தலில் தோற்றாலும், திமுக என்பது அரை நூற்றாண்டு கால அனுபவம் கொண்ட ஒரு பேரியக்கம். லட்சக்கணக்கான தொண்டர்களையும், வலுவான அடிமட்டக் கட்டமைப்பையும் கொண்ட திமுக, தவெக அரசின் சிறு தவறுகளைக் கூட மக்கள் போராட்டமாக மாற்றி, அரசுக்குத் தொடர் நெருக்கடிகளைக் கொடுத்து முடக்கத் துடிக்கும்.

    5. உட்கட்சிப் பூசலும் இடைத்தேர்தல் அச்சுறுத்தலும்: புதிய கட்சியில் நிலவக்கூடிய அதிகாரப் போட்டிகள் மற்றும் அதிருப்திகளை திமுக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலோ அல்லது இடைத்தேர்தல்களில் தவெக பின்னடைவைச் சந்தித்தாலோ, ஸ்டாலின் கூறியது போல முன்கூட்டியே தேர்தல் வருவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

    இது போல் மறு தேர்தலில் இருந்து தவெக தப்பிக்க ஒரே வழி! சட்டசபையில் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதுதான். என்னதான் கூட்டணி கட்சிகள் ஆதரவு இருந்தாலும் அது எந்த நேரத்திலும் சறுக்கலை சந்திக்கலாம் என்பதால் தங்களிடம் இருக்கும் 107 இடங்களை வைத்து எப்படி ஆட்சியை நடத்துவது என்பதை விஜய் உள்ளிட்டோர் யோசித்திருப்பர். 7 காலியிடங்கள் உள்ளன. எனவே சட்டசபையின் பலம் 227 ஆகும். இதில் பெரும்பான்மைக்கு 114 தேவைப்படுகிறது.

    ஒரு வேளை அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சி எம்எல்ஏக்கள் மேலும் 7 பேர் ராஜினாமா செய்தால் மொத்தம் 14 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும். அப்போது பெரும்பான்மை மிக்க அரசாக தவெக மாறும். ஆனாலும் 7 பேர் ராஜினாமா செய்வார்களா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

    English Summary

    Will CM Joseph Vijay completes his 5 years tenure or Tamil nadu will face like Ex CM Stalin predicts.