டெண்டர் முறைகேடு.. அமைச்சர் கில்லி சரத்தை அமைச்சரவையில் இருந்து நீக்க விஜய் திட்டம்?

  • தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் விதிகளை மீறி முடிக்கப்பட்ட பணிகள் குறித்த முறைகேடு விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆரம்பத்தில் ஐஏஎஸ் அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் சரத் மீது நேரடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் பெருங்களத்தூர் மற்றும் சிட்லபாக்கம் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் மற்றும் சிலைகள் அமைக்கும் பணிகள் சுமார் 45.9 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தப் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு இணையதளத்தில் வெளியாவதற்கு பல வாரங்களுக்கு முன்பே, பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்த அப்பட்டமான முறைகேடு ஆதாரங்களை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியதை அடுத்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    Advertisement

    அறப்போர் இயக்கம் புகார்

    அறப்போர் இயக்கம் தனது புகாரில், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர். S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.

    இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்., என்று கூறி உள்ளார்.

    Advertisement

    சரத் மீது ஏன் ஆக்சன் இல்லை

    அதிகாரி மீது மட்டும் அரசு நடவடிக்கை எடுத்தாலும், இந்த விவகாரத்தில் நேரடிப் பங்கு வகித்த துறை அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளிடமும் வலுவாக எழுந்தது. தொடக்க விழாவுக்கு அமைச்சரே நேரில் சென்று வைபவங்களை முன்னெடுத்திருக்கும் போது, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே பலரின் வாதமாக இருந்தது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்று கூறிவரும் அரசுக்கு, இந்த விவகாரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டினர்.

    Advertisement

    இந்த நிலையில் தான், அரசின் நற்பெயரைக் காப்பாற்றும் பொருட்டு தலைமை தீவிர யோசனையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் உள்ள முக்கிய நபராக இருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது சமரசம் இன்றி நடவடிக்கை எடுப்பது என்ற முடிவுக்கு தலைமை வந்துள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக அமைச்சர் சரத்தை அவசரமாக அமைச்சரவையில் இருந்து நீக்கவோ அல்லது தீவிர விசாரணைக்கு உட்படுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

    அரசுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் மீது பாய்ந்த நடவடிக்கை அரசியல்வாதிகள் மீதும் முழுமையாகப் பாயுமா அல்லது வெறும் கண்துடைப்பாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Will Vijay Drop Minister Sarath Over Tambaram Tender Scam? Cabinet Action Expected