முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க எகிறும் மக்கள்.. திடீரென பெண் செய்த களேபரம்.. கோட்டையில் பரபரப்பு

  • சென்னை: சென்னை தலைமை செயலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக இன்று 700-க்கும் மேற்பட்டோர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் திண்டிவனத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண் கடந்த முறை அளித்த மனுவிற்கே நடவடிக்கை எடுக்காததால் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.

    இன்று திங்கட்கிழமை என்பதால் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க ஏராளமான மக்கள் வருகை தந்தனர். காலை முதலே தலைமைச் செயலகம் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. சுமார் 700-க்கும் மேற்பட்டோர் முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வருகை தந்தனர். திடீரென அதிகளவிலான மக்கள் வந்ததால் வரிசையாக நின்று மனு அளித்தனர்.

    அப்போது திடீரென பெண் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதனை அங்கு பணியில் இருந்த போலீசார் பார்த்ததும் பெண்ணை தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பது தெரியவந்தது.

    சாமுண்டீஸ்வரி ஏற்கனவே முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்ததாகவும், ஆனால் அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தற்போது தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    A woman from Tindivanam allegedly attempted suicide outside the Tamil Nadu Secretariat, claiming no action was taken on her earlier petition. Police intervened and rescued her. More than 700 people had gathered to submit petitions to the Chief Minister's Special Cell.