சென்னை: தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக் கடன் பெற்றுத் தர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 1.71 லட்சம் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... யாருக்கெல்லாம் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவே, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் சுயமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் பயிற்சி அளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் தற்போது 1.71 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் இந்த குழுக்களுக்கு ரூ.13,750 கோடி வங்கிக் கடன் பெற்றுத் தர தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது, பெண்கள் தங்களுடைய குழுவின் மூலம் வங்கிக் கடன் பெற்று, வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த திட்டம் உதவியாக இருக்கும். இதில் முதலமைச்சரின் சிங்கப்பெண் கடன் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல், பல்வேறு காரணங்களால் செயல்படாமல் இருக்கும் 20,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 45,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்புகளுடன் இணைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனித்தனியாக செயல்படும் குழுக்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் திருநங்கைகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 1,000 திருநங்கைகளை ஒருங்கிணைத்து 180 குழுக்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதில் 75 திருநங்கைகள் குழுக்களுக்கும், 100 தனிநபர் திருநங்கைகளுக்கும் சிறு தொழில் தொடங்க உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 100 திருநங்கைகளுக்கு தொழில் பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. நகர்ப்புறங்களை சேர்ந்த 5,000 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 8,500 மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தவிர, 25,000 தொழில்முனைவோரை உதயம் திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்யவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி முதல், திருநங்கைகளுக்கு சிறு தொழில் வாய்ப்பு, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, மகளிர் குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகளை ஒரே திட்டத்தின் கீழ் முன்னெடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.மகளிர் குழுக்கள்
சிங்கப்பெண் கடன்
திருநங்கைகளுக்கும் சான்ஸ்
இளைஞர்களுக்கும் பயிற்சி