சென்னை: மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் தனது தேர்தல் வாக்குறுதியை, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தீவிரமாக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் திட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், புதிய விண்ணப்பங்களுக்காக பெண்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை மற்றும் பட்ஜெட்டிற்குப் பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் 17 லட்சம் பெண்கள் புதிய பயனாளிகளாக இணைக்கப்பட்ட நிலையில், தகுதியிருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் தீவிரமாக மேல்முறையீடு செய்திருந்தனர்.
தேர்தல் காலக் கட்டுப்பாடுகளால் இம்மனுக்கள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கை பலரது வாழ்வாதாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 15-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டபோது, முறையீடு செய்திருந்த தகுதியான பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் அரசு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நேரடியாக இந்தத் தொகையை வழங்கியது பயனாளிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. தங்களின் தகுதியை அரசு சரியாகக் கணக்கிட்டு மீண்டும் வாய்ப்பளித்திருப்பது பெரிய உதவியாக இருப்பதாகப் பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் பலன் உடனடியாகக் கிடைத்திருப்பது, இத்திட்டத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய பயனாளிகள் மற்றும் ஏற்கனவே பயன்பெற்று வருவோர் என அனைவரும் அரசின் இந்தச் செயல்பாட்டை சோஷியல் மீடியாவில் பொது இடங்களிலும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரத் தயாராகி வருவதாக தெரிகிறது. தவெக அரசு - மகளிர் உரிமைத் தொகை தேர்தல் பிரச்சாரத்தின் போதே, மகளிர் உரிமைத்தொகையை மாதந்தோறும் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அவர் வாக்குறுதியும் அளித்திருந்தார். அதற்கேற்றபடி புதிய அரசு பதவியேற்றவுடன் முந்தைய திட்டத்தை நிறுத்தாமல், மே மாதத்திற்கான தொகையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதே நேரத்தில், திட்டத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்யவும், பயனாளிகளின் லிஸ்ட்டை முறையாக ஆய்வு செய்யவும் அரசு தீவிரப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் திட்டத்தை மேம்படுத்தவும், தகுதியான அனைவருக்கும் பயன் கிடைப்பதை உறுதி செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், உரிமைத்தொகை கிடைக்காதவர்களும், புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருப்பவர்களும் இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை பொறுத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2500 ரூபாய் உயர்வு எப்போது இப்போதைக்கு சுமார் 1.3 கோடி பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் நிலையில், தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தினால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.23,400 கோடிக்கும் மேல் கூடுதலாக நிதி தேவைப்படும் என தெரிகிறது.. அதனால்தான், இதனை கருத்தில் கொண்டு, ஜூன் அல்லது அதற்கு பிறகு வரும் மாதங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கைக்குப் பிறகே இறுதி முடிவுகள் எடுக்கப்படுமாம். அதுமட்டுமல்ல, மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்களை தவிர்த்து, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தகுதி வரம்புகளை மாற்றியமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய விண்ணப்பங்கள் எப்போது எப்படியும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து, இது தொடர்பான புதிய அரசாணை வெளியான பிறகே, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதவாக்கில் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அதிரடி முயற்சியால் தகுதியான ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் இந்த உதவித்தொகை முறையாகச் சென்றடையும் என்பதால், பெண்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.. நிதியாதாரத்தை சரியாக திட்டமிட்டு வாக்குறுதி அளித்தபடி ரூ.2,500 வழங்கும் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது, தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்தத் திட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும்போது, பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தகுதி வரம்புகளில் அரசு மேற்கொள்ளப்போகும் புதிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அந்தந்த காலத்தில் வெளியாகும் என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..