திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

  • சென்னை: திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதல்வர் விஜய்யிடம் தெளிவுபடுத்திவிட்டதாக கூறிய திருமாவளவன், அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்துவிட்டார். திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திலேயே முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எனக்கு செல்லப்பிள்ளை போல்.. 234 தொகுதிகளும் சொந்த தொகுதிதான்.. உங்கள் வீட்டு பிள்ளைதான் வேட்பாளர்.. நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

    Advertisement

    இதன் மூலமாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான முழக்கத்தை விஜய் முன் நின்று தொடங்கி வைத்துள்ளார். இருப்பினும் தவெக மற்றும் விசிகவினர் மத்தியில் கடந்த சில வாரங்களாகவே ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட இருக்கிறார் என்று தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

    தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்ட சூழலில், கூட்டணியை இன்னும் இணக்கமாக கொண்டு செல்ல விஜய் இந்த முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் விரும்பினார். ஆனால் திடீரென யூடர்ன் போட்டு அந்த முடிவில் இருந்து அடுத்த சில நாட்களிலேயே பின் வாங்கினார்.

    Advertisement

    இதனால் திருமாவளவனுக்கு மாநில அரசியலுக்குள் மீண்டும் வரும் ஆசை இருப்பதாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் களமிறக்கப்பட்டால், அங்கு திமுக அரசியல் செய்ய முடியாத சூழல் உருவாகும். இந்த நிலையில் ஃபேஸ்புக் நேரலையில் திருமாவளவன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி திருமாவளவன் பேசுகையில், இப்போதும் சில பேர் திருச்சி கிழக்கு திருமாவளவன் போட்டியா என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 100% நான் சொல்கிறேன்.. நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். அதற்கான வாய்ப்பு இல்லை. இதனை முதல்வர் விஜய்யிடமும் தெளிவுபடுத்திவிட்டேன். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

    Advertisement

    தோழர்கள் என்னை வற்புறுத்தியது உண்மை தான்.. எனக்காக விஜய்யிடம் பேசியதும் உண்மை தான். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்த அறிவிப்பு அவரது கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக மற்றும் திமுக இடையில் நேரடி போட்டியே நிலவும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Thirumavalavan: "Won't Contest in Trichy East By-Election" VCK Chief Thirumavalavan Makes Big Announcement