சென்னை: இந்த உலகில் அதிசயங்கள் மற்று வியக்க வைக்கும் இடங்கள் பல உள்ளது. அதில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று தான் இந்தியாவின் லடாக். உலகின்மிக உயரமான இடங்களில் ஒன்றான லடாக்கில் இந்தியா செய்யும் போகும் சம்பவம் பக்கத்தில் உள்ள சீனாவையே மிளர வைக்க போகிறது. ஆம்..
இமயமலையில் உலகின் மிக உயரமான ரயில் நிலையத்தை லடாக்கில் இந்தியா உருவாக்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,244 அடி உயரத்தில் இந்த லடாக் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சீனாவின் 'டாங்குலா' ரயில் நிலையத்தை இந்த ரயில் நிலையம் முறியடிக்கும் என்கிறார்கள்.
இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் அதிநவீன பாய்ச்சலுடன் பல புதிய ரயில்பாதைகளை அமைத்து வருகிறது. அண்மையில் தான் காஷ்மீருக்கு உலகின் மிகப்பெரிய ரயில் பாலமான செனாப் ரயில் பாலம் மூலம் ரயில் பாதையை தொடங்கி வைத்தது. மிசோரம் மாநிலம் ஐசாலுக்கு கடந்த 2025ம் ஆண்டு ரயில் பாதை உள்ளது. அடுத்ததாக சிக்கிமின் கேங்டாக், நாகலாந்தில் கோஹிமா, மணிப்பூர் - இம்பால், அருணாச்சலப் பிரதேசத்தில் பாசிகாட் போன்ற மலைப்பகுதிகளுக்கு ரயில் பாதைகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் மிகமிக சவாலான ரயில் பாதைகள் ஆகும்.
அந்த வகையில் அடுத்தடுத்து புதிய ரயில் பாதைகளை ரயில்வே உருவாக்க உள்ளது. விரைவில் உலகின் மிக உயரமான ரயில் நிலையம் என்ற சாதனையை இந்திய ரயில்வேத் துறை எட்டிப் பிடிக்க போகிறது. இந்தியாவின் இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை, மணாலி வழியாக, லடாக்கின் தலைநகரான லேவுடன் இணைக்கும் வகையில் 489 கி.மீ. தூரத்துக்கான வழித்தட பாதையை உருவாக்க உள்ளது. இதற்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு ஆகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த வழித்தடப்பாதையில் லடாக் பகுதியில் டாங்லாங் லா கணவாய் அருகே அமைக்கப்பட உள்ள ரயில் நிலையம்தான் இந்திய ரயில்வேத் துறையின் சாதனைக்கு மகுடம் ஆக இருக்க போகிறது. அவ்வாறு அமைய உள்ள இந்த ரயில் நிலையம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரத்து 244 அடி (சுமார் 5,256 மீட்டருக்கு மேல்) உயரத்தில் இருக்கப் போகிறது. மொத்தம் உள்ள 489 கி.மீ. தொலைவிலான இந்த பாதை இமயமலையின் கடினமான நிலப்பரப்பு மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகள் வழியாக செல்வதால் அதில் சுமார் 270 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதைகள் வழியாகவே ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிக உயரத்தில் நிலவும் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வகையில், அழுத்தப்பட்ட மற்றும் வெப்பமூட்டப்பட்ட பெட்டிகளை இந்த திட்டத்தில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ள லடாக் பகுதிக்கு, குளிர்காலங்களிலும் மற்றும் எந்தவொரு காலநிலைச் சூழலிலும் ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வீரர்களை மிக விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல இந்த ரயில் பாதை பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது. திபெத்தில் உள்ள சீனாவின் 'டாங்குலா' ரயில் நிலையம் தான் உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ரயில் நிலையமாக இருக்கிறது. இதன் உயரம் சுமார் 5 ஆயிரத்து 68 மீட்டராக (16 ஆயிரத்து 627 அடி) உள்ளது. இந்தியாவில் அமைக்க திட்டமிட்டு வரும் இந்த புதிய ரயில் நிலையம் அந்த சாதனையை முறியடித்து சீனாவின் ரயில் நிலையத்தை பின்னுக்கு தள்ளும் என்கிறார்கள். டாங்லாங் லா கணவாய் பகுதியில் வரும் இந்த பிரமாண்ட திட்டம் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத்துறையில் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும் என்கிறார்கள்.தீபாவளிக்கு சொந்த ஊர் போக டிக்கெட் கிடைக்கலயா? சென்னை - திருச்சிக்கு முன்பதிவில்லாத ரயில் அறிவிப்பு