கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை

  • சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் போலீஸ் என்று கூறி, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் உங்கள் மகன் மீது போதைப்பொருள் வழக்கு இருக்கிறது. அவரை கைது செய்யாமல் இருக்க ரூ.1 லட்சத்தை கொடுங்கள் என மிரட்டி உள்ளார்கள் . பயந்து போன அவரிடம், நகை பணம் பறித்த ஊர்க்காவல்படை வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவருக்கு காதல் பிரச்சனை, இன்னொருவருக்கு ரொக்கப்பரிசு கிடைக்கும் என்ற ஆசை.. இறுதியில் இருவரையும் சிறையில் தள்ளி உள்ளது.

    Advertisement

    சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த 53 வயதாகும் செல்வி வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது மகன் டெல்லியில் பணியாற்றி வருகிறார். கடந்த மே 23-ந்தேதி இரவு செல்வியின் வீட்டுக்கு 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் என்று கூறி உள்ளனர். பின்னர், வீட்டில் போதைப்பொருள் மறைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறி சோதனை செய்தார்களாம் ஆனால் வீட்டில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை.

    Advertisement


    ஒரு லட்சம் ரெடியா

    அப்போது செல்வியிடம் உங்கள் மகன் மீது போதைப்பொருள் வழக்கு இருக்கிறது. அவரை கைது செய்யாமல் இருக்க ரூ.1 லட்சத்தை கொடுங்கள் என மிரட்டினார்களாம். ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என செல்வி கூறினாராம். இதனால் அவரது காதில் அணிந்திருந்த கம்மல், கையில் போட்டிருந்த தங்க மோதிரங்களை இரக்கமே இல்லாமல் அந்த இரண்டுபேர் பறித்தனர். பின்னர் பணத்தை தயார் செய்யும்படி கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார்களாம் சிறிது நேரம் கழித்து செல்வியின் செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள், ரூ.1 லட்சம் ரெடியாகிவிட்டதா? என்று கேட்டனர்.

    செல்வி தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை 'ஜி-பே' மூலம் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். மீதி ரூ.50 ஆயிரத்தையும் தயார் செய்யுங்கள் என்று கூறிவிட்டு மர்மநபர்கள் இருவரும் போனை வைத்தார்களாம்.

    இரண்டு பேர்

    இதில் சந்தேகம் அடைந்த செல்வி, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செல்வி வசித்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், செல்வியிடம் நகை மற்றும் பணத்தை பறித்ததாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் சுகுமார் (43) மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த சக்திவேல் (33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். செல்வியிடம் பறித்த தங்க நகைகள், ரூ.50 ஆயிரமும் மீட்கப்பட்டது.

    Advertisement

    இவர்களில் பிரவீன் சுகுமார் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.. வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில், போலீஸ் ரோந்து வாகன டிரைவராகவும் பணியாற்றுகிறார். அவரது தந்தை ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.

    ரொக்க பரிசு

    கைதான சக்திவேல் மீது ஏற்கனவே போதைப்பொருள் வழக்கு இருக்கிறது. பிரவீன் சுகுமார், யாராவது போதைப்பொருள் விற்றால் தனக்கு தகவல் கொடுக்கும்படியும், உயர் அதிகாரிகளிடம் அந்த தகவலை சொன்னால் தனக்கு ரொக்கப்பரிசு கிடைக்கும் என்றும் சக்திவேலிடம் கூறினார். சக்திவேல் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கியவர் என்பதால், செல்வியின் வீட்டை காட்டி, அங்கு போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவலை சொல்லியதுடன் போலீஸ் போல நடித்து, அவரது வீட்டையும் சோதனை செய்து பணம்-நகையை பறித்தது தெரியவந்தது.

    Advertisement

    காதல் பிரச்சனை

    முன்னதாக காதல் பிரச்சனையில் செல்வியின் குடும்பத்துக்கும் சக்திவேலுடன் ஏற்கனவே மோதல் இருந்துள்ளதாம். இதனால் தவறான தகவலை சொல்லி செல்வியை இந்த பிரச்சனையில் சக்திவேல் மாட்டிவிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Selvi, a 53-year-old resident of Viswanathapuram in Kodambakkam, Chennai, lives alone. Meanwhile, the young man who embroiled Selvi's family in trouble over a romantic dispute is currently in prison.