சென்னை: நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதுபோல போராட்டத்தில் ஈடுபடுவோரின் முக்கியமான நோக்கமாக இருப்பதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
கடந்த சில வாரங்களாகவே டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இருந்தார்.
இந்தச் சூழலில் தான் கதந் திங்கள்கிழமை கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். அன்றைய தினம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கரப்பான் பூச்சி கட்சியின் பேரணியும் நடத்தப்பட்டது. இந்த பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடந்ததுடன், பலர் காயமடைந்தனர். இது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அராஜகவாதிகளுக்கான போலி முகமூடி என ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "கரப்பான் பூச்சி ஜனதா என்பது அராஜகவாதிகளுக்கான போலி முகமூடி. இந்த போராட்டம் தன்னிச்சையாக நடைபெற்றதல்ல. 20 நாட்களாக பெரிய அளவில் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் தான் அரசியல் கூட்டங்கள் இணைந்தன. இது முன்கூட்டியே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம். இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.. இந்த போஸ்ட்டை ரீட்வீட் செய்த ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இது தொடர்பாக மேலும், "டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கம் இந்தியாவை குழப்பத்தில் தள்ளுவதும், நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதும்தான் என்பது தெளிவாக இருக்கிறது. இந்தியாவை பலவீனப்படுத்த விரும்பும் சக்திகள் இந்த முயற்சிக்கு துணை நிற்கின்றன. இதுபோன்ற தீய நோக்கத்தை நாம் தோற்கடிக்க வேண்டும். இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடு. மக்களின் கருத்தை வெளிப்படுத்த சரியான வழி தேர்தல் தான்" என்று அவர் பதிவிட்டுள்ளார். கரப்பான் பூச்சி கட்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதிலும் சமீப காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நேரத்தில் போராட்டத்தை கண்டித்து ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ள இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. கரப்பான் பூச்சி போராட்டத்தை பொறுத்தவரை அது இன்னுமே தொடர்கிறது. நாடாளுமன்ற முற்றுகையின் போது தடியடி நடத்தப்பட்ட போதிலும் போராட்டம் தொடர்கிறது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி , காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து திமுக இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கரப்பான் பூச்சி
குருமூர்த்தி
ஸ்ரீதர் வேம்பு
தொடரும் போராட்டம்