பிரான்ஸ் போல்.. சமூக வலைதளங்களுக்கு முதலில் தடை போடுங்க.. ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு தடாலடி

  • சென்னை: பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நம் நாட்டிலும் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

    Advertisement

    ஜோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் கவனம் பெறும். அதேசமயம் சில நேரங்களில் விவாதத்தையும் கிளப்பும்.

    Advertisement

    இந்நிலையில் தான் இந்தியாவிலும் குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

    அதாவது பத்திரிகையாளர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், '' ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் பிரான்ஸ் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி 15 வயதுக்கு உட்பட்டோரின் சமூக வலைதள கணக்குகள் செயலிழக்க செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்தை முதல் நாடாக ஆஸ்திரேலியா தான் கொண்டு வந்தது. அதன்பிறகு இந்தோனேஷியா கொண்டு வந்தது. அந்த வரிசையில் ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இந்த தடை உத்தரவு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன'' என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இந்த பதிவுக்கு ஸ்ரீதர் வேம்பு, ''இந்தியாவும் இளம் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும். நம் நாட்டின் குழந்தைகள் புத்தகம் படிப்பது, வெயிலில் விளையாடுவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு சமூக வலைதளங்களில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவுகள் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக நெட்டிசன் ஒருவர், ''முற்றிலுமாக இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இளைஞர்கள் சமூக ஊடகங்களை கட்டுப்பாடின்றி பயன்படுத்துகின்றனர். இது அவர்களை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்குகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் மனநலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அதேவேளையில் இன்னொருவர், ''எந்த வித குறிக்கோள் இன்றி பலரும் சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவோருக்கும், யூடியூப், இன்ஸ்டாகிராம் மூமாக தொழில் தொடங்கும் குழந்தைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதனால் குழந்தைகள் சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு பதில் அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது சிறப்பாக இருக்கும்'' என்றார்.

    மற்றொருவர்,''நம்முடைய வாழ்க்கைகயின் ஒவ்வொரு விஷயங்களிலும் அரசு தடையிட வேண்டிய தேவையில்லை. இதுபோன்ற கலாசாரத்தை முதலில் நிறுத்த வேண்டும். எல்லோரும் அவரவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வழி செய்ய வேண்டும். ஒருவர் தனதுக்கும், தனது குழந்தைகளுக்கும் என்ன வேண்டும் என்பதே அவர்களே தீர்மானித்து கொள்ள வேண்டும்'' என கோபத்தை கொப்பளித்துள்ளார்.

    Advertisement

    இப்படியாக பலரும் கருத்து தெரிவித்து வருவதால் ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவு தற்போது விவாதமாகி உள்ளது. சரி நீங்களும் சொல்லுங்கேளேன்.. நம் நாட்டில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமா? வேண்டாமா? என்று உங்களின் கருத்துகளை கமெண்ட்டாக சொல்லுங்கள் பார்க்கலாம்.

    English Summary

    Zoho Sridhar Vembu says that, ‘‘India should ban social media for young children too. I belive young children should read physical books, play in the dirt under the sun and stay away from social media’’.