எங்க தூக்கமே போச்சு..நரகமாகும் சென்னை! இரவில் வீடுகளுக்குள் வேலையை காட்டும் வெப்பம்! ஷாக் ரிப்போர்ட்

  • சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் வெயில் காலம் என்றால் மக்கள் திணறுவதும், புலம்புவதும் புதிதல்ல. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவு ஒன்று, பகலில் மட்டும் அல்லாமல் இரவிலும் சென்னையின் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் கடும் வெப்பம் நிலவுவதாக கூறி அதிர வைத்துள்ளது. இரவிலும் வீடுகளுக்குள் நிலவும் வெப்பத்தால், பல பகுதிகளில் மக்கள் இரவு நேரத்திலும் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

    Advertisement

    தமிழகத்தில் பொதுவாக பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரத்தில் காற்றோட்டம் காரணமாக சற்று குளிர்ச்சியான காலநிலையால்ல், நிம்மதியான தூக்கம் கிராமப் பகுதிகளில் கிடைக்கும். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அந்த நிலை மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    குறிப்பாக குறைந்த வசதியுள்ள சிறிய மற்றும் நடுத்தர வீடுகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சென்னை நகரின் பல பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெப்பநிலை ஆய்வு நடத்தப்பட்டது.

    சென்னை வெப்பம்

    அந்த ஆய்வில், இரவு நேரத்திலும் வீடுகளுக்குள் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையாமல் இருப்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் நள்ளிரவிலும் 34 டிகிரி வரை வெப்பம் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் எட்டு மாதங்கள் மக்கள் அதிக வெப்பத்துடனேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 5,800 மணி நேரம் வரை வீடுகளுக்குள் கடுமையான வெப்பம் நிலவுகிறது என்பது கவலைக்கிடமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    கான்கிரீட் கட்டிடங்கள்

    இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கான்கிரீட் கட்டிடங்கள் கூறப்படுகின்றன. பகல் நேரத்தில் சுவர்கள் மற்றும் மாடிகள் வெப்பத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்கின்றன. வெளியே வெப்பம் குறைந்த பிறகும் அந்த வெப்பம் மெதுவாக வீடுகளுக்குள் வெளியேறுவதால் இரவிலும் சூடு குறைவதில்லை. இதனால் மின் விசிறி ஓடியபோதும் பலருக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை.

    சென்னை வானிலை

    மேலும் நகரங்களில் தொடர்ச்சியாக நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகள், குறைந்த ஜன்னல்கள், காற்றோட்ட வசதி இல்லாமை போன்றவை பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. பல குடியிருப்பு பகுதிகளில் இரவு நேர காற்றே உள்ளே வராத நிலை இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். குளிர்சாதன வசதி உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த தாக்கம் ஓரளவு குறைவாக இருந்தாலும், சாதாரண குடும்பங்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    தூக்கமின்மை

    தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக தூக்கமின்மை, உடல் சோர்வு, நீரிழப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இரவில் உடல் குளிர்ச்சி அடையாததால் இதய நோய் அபாயமும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மரங்கள் குறைவது, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அதிகரிப்பது, ஏரிகள் மற்றும் திறந்த நிலப்பரப்புகள் குறைவது போன்ற காரணங்களாலும் நகர வெப்பம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நகர வெப்ப தீவு

    இதை "நகர வெப்பத் தீவு விளைவு" என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வாக வீடுகளில் காற்றோட்ட வசதிகளை அதிகரித்தல், கூரைகளில் வெப்பத்தை குறைக்கும் பூச்சு பயன்படுத்துதல், மரநடுகை அதிகரித்தல், திறந்த வெளி இடங்களை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஒருகாலத்தில் இரவு நேரங்களில் கடற்காற்றால் குளிர்ந்த நகரமாக இருந்த சென்னை, இன்று இரவிலும் கொதிக்கும் நகரமாக மாறி வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    New study reveals Chennai homes remain dangerously hot even at night, raising serious health and urban heat concerns.