கோவையில் சாமியார் வேடத்தில் திருடும் ராஜஸ்தான் கும்பல்! வாட்ஸ் ஆப் மெசேஜால் சிக்கிய 2 பேர் கைது!

  • கோயமுத்தூர்: கோவை மாவட்டத்தில் சாமியார் வேடத்தில் தொழிலதிபர்களின் நிறுவனங்கள், வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து திருடிய ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    கோவை மாவட்டம், சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடத்தில் வந்து தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சமயம் பார்த்துத் திருடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த வடமாநிலக் கும்பல் ஒன்றை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    Advertisement

    வாட்ஸ்அப்பில் பரவிய ஒரே ஒரு விழிப்புணர்வு மெசேஜ் இந்த கும்பலைச் சிக்க வைத்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு
    ஜூலை 20 ஆம் தேதி சாமியார் வேடத்தில் வந்த இருவர், நிறுவனத்தில் இருந்தவரிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர்.

    அவர் தண்ணீர் எடுக்கச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி, ஒருவர் ஆபிஸ் அறைக்குள் நுழைந்து உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் இல்லை எனக் கூறியதும் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    Advertisement

    பின்பு மறுநாளும் ஜூலை 21 ஆம் தேதி அதே நேரத்திற்கு வேறு ஒரு நபருடன் மீண்டும் வந்துள்ளனர். காவி உடை அணிந்தவர் வெளியே நிற்க, கருப்பு உடை அணிந்த சாமியார் நைசாக அலுவலகத்திற்குள் புகுந்து மேஜையில் இருந்த ரூ.5,000 ரொக்கப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளனர்.

    இந்த நிலையில் அலுவலகத்திற்கு வந்த உரிமையாளர் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது சாமியார் வேடமிட்ட நபர் பணத்தைத் திருடிச் சென்றது அம்பலமானது.

    உடனடியாக உஷாரான உரிமையாளர், அந்த வீடியோ ஆதாரங்களை உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து, "அனைவரும் கவனமாக இருங்கள்" என எச்சரிக்கை பதிவு செய்தார். மேலும், இது குறித்து நீலாம்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

    Advertisement

    இந்நிலையில், அன்னூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், தனது வாட்ஸ்அப் குழுவில் எச்சரிக்கப்பட்ட அதே கார் தமக்கு முன்னால் செல்வதைக் கவனித்துள்ளார்.

    சந்தேகமடைந்த அவர், உடனடியாகக் காரைப் பின்தொடர்ந்தவாறே தனது நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தார். நண்பர்கள் விரைந்து செயல்பட்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததோடு, கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் அந்தச் சாமியார்கள் வந்த காரை அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

    பிடிபட்ட நபர்களிடம் நீலாம்பூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கும்பலாக வந்து தனிமையில் இருக்கும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை குறிவைப்பதும் தெரியவந்தது.

    Advertisement

    பணம் தர மறுப்பவர்களிடம் "எலுமிச்சம் பழத்தை வைத்து மந்திரம் செய்து விடுவோம்" எனப் பயமுறுத்திப் பணம் பறித்துள்ளனர். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பார்த்து, நைசாக உள்ளே புகுந்து பணத்தைத் திருடிச் செல்வதையும் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

    வாட்ஸ் ஆப் தகவலால் இந்த விசித்திரக் கும்பல் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைதானவர்களிடம் நீலாம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Two were arrested in Coimbatore who belongs to Rajasthan, for thefting at house and returns by car.