கோவை குப்பைக்குள் மின்னிய 3 சவரன்.. அப்படியே ஒப்படைத்த தங்கம்! தூய்மை பணியாளருக்கு குவியும் பாராட்டு

  • கோவை: இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு இடையே மனிதாபிமானம் என்பது அரிதாகி வருகிறது. அதிலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மை என்பது இந்த காலத்தில் ஒரு பேரதிசயமாகவே பார்க்கப்படுகிறது.. மொத்தமும் பணம்தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில், வறுமையிலும் நேர்மையாக வாழக்கூடியவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அதிசயமான நபர்தான் கோவையை சேர்ந்த தூய்மைப் பணியாளர் துரை...!!

    Advertisement

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி பணியாளர் பத்மா,

    Advertisement

    தங்க நகைகள்

    குப்பை சேகரிக்கும்போது பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 45 பவுன் தங்க நகைகளைக் கண்டெடுத்து, மிகுந்த நேர்மையுடன் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.. நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தற்செயலாகத் தவறிவிட்ட அந்த நகைகள், முறையாகச் சரிபார்க்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும், பல லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கண்டெடுத்தும் துளியும் பேராசை கொள்ளாமல், தனது நேர்மையை நிலைநாட்டிய தூய்மைப் பணியாளர் பத்மாவின் இந்தச் செயல், காவல்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொதுமக்களின் பாராட்டுகளையும் குவித்திருந்தது.

    Advertisement

    கோவை ஊழியரின் நேர்மை

    இதேபோல கோவையிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவர் தனது 6 பவுன் தங்கச் சங்கிலியைத் தவறவிட, அது குப்பையோடு குப்பையாகச் சென்றிருக்கலாம் என அஞ்சி மாநகராட்சி கவுன்சிலர் உதயக்குமாரிடம் உதவி கோரினார்.. உடனே களமிறங்கிய தூய்மைப் பணியாளர்கள் ராணி, சத்யா மற்றும் சாவித்திரி ஆகியோர், சுமார் 1 டன் எடையுள்ள குப்பைக் குவியல்களை மிகுந்த சிரமத்திற்கு இடையே பல மணி நேரம் கிளறித் தேடி நகையை மீட்டெடுத்தனர்.

    காணாமல் போன நகை கிடைத்த மகிழ்ச்சியில் சிவகாமி நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்க, அந்தப் பணியாளர்கள் நகையை ஒப்படைத்தனர்.. துப்புரவுப் பணியாளர்களின் இந்த அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான செயலை சமூக வலைதளங்களில் பலரும் வியந்து பாராட்டியது நினைவிருக்கலாம்.

    Advertisement

    3 சவரன் தங்க நகை

    இந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.. மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலத்தின் 69-வது வார்டில் உள்ள பாரதி பார்க் 4-வது வீதியில், ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருபவர் சக்திவேல்.. இவர் நேற்று வழக்கம்போல குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது குப்பைகளின் நடுவே 3 பவுன் எடை கொண்ட தங்க நகை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. அந்த நகையை எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல், உடனடியாகத் தேடிச் சென்று அந்த வீட்டின் உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்தார்..

    கிடைத்த வரை லாபம் என்று எண்ணாமல், தான் கண்டெடுத்த நகையைத் துளியும் பேராசைப்படாமல் உரியவரிடம் ஒப்படைத்த சக்திவேலின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும், தான் செய்யும் தொழிலின் மாண்பைக் காக்கும் வகையில் அவர் காட்டிய நேர்மை, சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    நேர்மையான ஊழியர்கள்

    மாநகராட்சிக்கு நற்பெயரைத் தேடித்தந்த ஒப்பந்த ஊழியர் சக்திவேலின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவருக்குத் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.. ஒரு சாமானிய பணியாளரின் இந்த உயரிய செயல், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகக் கூறி பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்..

    கடினமான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் சுயநலமின்றி செயல்படும் இத்தகைய தூய்மைப் பணியாளர்களின் நேர்மை, மனிதநேயம் இன்னும் குறையவில்லை என்பதை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.. இவர்களின் உயரிய குணம் மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது..!!!

    English Summary

    3 sovereigns Gold Found in Garbage! Honest Sweeper Returns It to Owner, Coimbatore Touched by Emotion