கோவை: கோவையில் முக்கியமான இடத்தை வாங்க விரும்பிய ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரொக்கமாகவே 50 லட்சம் பணத்தை வாங்கியதுடன், 10 லட்சத்தை ஆன்லைனிலும் வாங்கி உள்ளார்கள். அப்படி பணம் வாங்கியவர்கள், நிலத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக
ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக தரகர் சிக்கியுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பவர் அதிகாரம் என்பது நிலத்தை விற்பனை செய்ய இன்றைக்கு பலரும் பயன்படுத்தும் விஷயம். பவர் அதிகாரம் கொடுத்து தான் ரியல் எஸ்டேட் அதிபர்கள், நிலங்களை விற்பனை செய்வார்கள். எல்லா பிளாட்டுக்கும் நிலத்தின் உரிமையாளர் நேரில் வரத்தேவையில்லை.. குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் பிரதிநிதிகளுக்கு பவர் தந்து, அவர்கள் மூலம் நிலத்தை விற்பார்கள். அப்படி கோவையின் முக்கியமான நகரப்பகுதியில் ஒரு முக்கிய பிரமுகர் இடத்தை விற்க உள்ளதாகவும், அந்த இடத்தின் பவர் தங்களிடம் உள்ளதாகவும் இரண்டு பேர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி உள்ளார்களாம். மொத்தம் 60 லட்சம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடந்ததுஎன்பதை விரிவாக பார்ப்போம்.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த 42 வயதாகும் ஜெகநாதன் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் பல இடங்களில் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நிலத்தரகர்களான கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணன், பீளமேட்டை சேர்ந்த வெங்கடாசலபதி ஆகியோர் அறிமுகம் ஆகியிருக்கிறார்களாம். அவர்கள், கோவையை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை விற்க தங்களுக்கு அதிகாரம் கொடுத்து உள்ளார் என்றும், எனவே நாங்கள் அவருடைய சொத்துகளை விற்பனை செய்து வருகிறோம் என்றும் ஜெகநாதனிடம் கூறியிருக்கிறார். மேலும், இந்த பகுதியில் உள்ள சிவராம் நகரில் 8 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், அந்த நிலத்தை நாங்கள் விற்பனை செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். அந்த நிலத்தை ஜெகநாதன் வாங்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் ரூ.10 லட்சத்தை வங்கி மூலம் சரவணன், வெங்கடாசலபதி ஆகியோர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ரூ.50 லட்சத்தை அவர்களிடம் நேரடியாக வழங்கி உள்ளார்கள். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு பல நாட்கள் ஆகியும், அவர்கள் ஜெகநாதனுக்கு நிலத்தை விற்பனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் நேரில் சந்தித்து அவர்களிடம் கேட்டபோது பணத்தை திரும்ப கொடுக்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து ஜெகநாதன், கோவை துடியலூர் போலீசில் புகார் செய்தார். தன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலபதியை கைது செய்தனர். சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.