கோவை: கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை பூசாரி உட்பட ஊழியர்கள் திருடிய விவகாரத்தில் உதவி ஆணையர் உட்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் உத்திரவின் பேரில் இந்த சஸ்பென்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் டவுன்ஹால் பகுதியில் உள்ள. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. கோனியம்மன் கோயிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் இருக்கின்றன. கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் ஒரு உண்டியலை மட்டும் ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து அதில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இதை பக்தர் ஒருவர் நேரடியாக பார்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர், ஆணையர் ஆகியோருக்கு எழுத்து பூர்வமாக புகாரளித்தார். இதனையடுத்து கோவையில் உள்ள இந்து சமய அறநிலைய இணை ஆணையர் ரமேஷ்குமார் தலைமையில் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினார்கள். கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு உண்டியலை எண்ணாமல் அதில் இருந்த ரூ.31,000 பணத்தை சிலர் தனியாக எடுத்து வைத்துக்கொண்டது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணையில் கோயில் பூசாரி உட்பட 4 பேரும் கூட்டு சேர்த்து திருடியது உறுதியானது. இதனையடுத்து இந்து சமய அறநிலைய துறை சார்பில் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோனியம்மன் கோயில் ஊழியர்கள் பாலசுப்பிரமணியன் , சரவணன் ,பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உண்டியலில் திருடிய பணத்தை 4 பேரும் பங்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனின் உண்டியல் பணத்தை கோயில் ஊழியர்களே திருடி இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. கோவை பெரியகடை வீதி அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் கடந்த 15.07.2026 அன்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு உண்டியலை மட்டும் திட்டமிட்டு திருடிய 4 ஊழியர்கள் அதனை கண்டுபிடிக்காமல் இருந்த 2 சரக ஆய்வாளர்கள், 1 செயல் அலுவலர் மற்றும் 1 உதவி ஆணையர் ஆகியோரை கூண்டுடோடு பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது காவல் துறை வழக்கு பதியப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு உள்ளது. பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்), சரவணன் (அலுவலக உதவியாளர்), பிரதிப்குமார் (திருவலகு), கிருஷ்ணராஜ் (பூசாரி), ராம்குமார் (சரக ஆய்வாளர்), உதயகுமார் (சரக ஆய்வாளர்), குமார் (செயல் அலுவலர்), உஷா நந்தினி (உதவி ஆணையர்) உள்ளிட்டோர் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.