கோவை: கோவையின் மிக முக்கிய மற்றும் பிஸியான அவிநாசி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் ஆபத்தான முறையில் சாகசப் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி பகுதியில் இருந்து கிருஷ்ணம்மாள் கல்லூரி வரை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில், ஒரே நேரத்தில் 4 இளம் பெண்கள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே, தலைக்கவசம் இன்றியும், விதிமுறைகளை முற்றிலும் புறக்கணித்தும் இவர்கள் சென்ற காட்சியைப் பின்னால் வந்த காரில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் (Mobile Phone) படம்பிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இதே அவிநாசி சாலையில் 3 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்களை நேரில் அழைத்த போக்குவரத்துப் காவல்துறையினர் அவர்களுக்குக் கடுமையான அறிவுரைகளை வழங்கி அனுப்பினர். அந்தப் பெண்களும் "இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட மாட்டோம்" என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். காவல்துறை எச்சரித்து அறிவுரை வழங்கிய சில நாட்களிலேயே, தற்போது மீண்டும் 4 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்திருப்பது அவிநாசி சாலை வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்தப் பாதுகாப்பையும், சாலையில் செல்லும் மற்ற பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, வெறும் அறிவுரையோடு விட்டுவிடாமல் கோவை மாநகரப் போக்குவரத்துப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரே வாகத்தில் நான்கு பெண்கள் பயணித்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இப்படியான ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது என்பது தெரிந்தாலும் ஹெல்மட் அணியாமல், ஒரே வாகனத்தில் நான்கு பேர் பயணிப்பது கோவை உள்பட பல்வேறு ஊர்களில் தொடர் கதையாகவே இருக்கிறது. என்ன தான் போக்குவரத்து விதிகளை போலீசார் கண்காணித்தாலும், பலர் பயணத்திற்கு ஆகவும் செலவுகளை கருத்தில் கொண்டு ஒரே வாகனத்தில் 3 பேர் அல்லது 4 செல்கிறார்கள். இப்படி சென்றால் கண்டிப்பாக ஏஐ கேமரா மூலம் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இப்படி அபராதங்களை தனியாங்கி முறையில் விதித்தால் நான்கு பேர் செல்வதற்கு நிச்சயம் யோசிப்பார்கள், ஒருவழிப்பாதையில் செல்ல யோசிப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி உள்ளார்கள்.