சமூகநீதி விடுதிகளில் தரமற்ற உணவு? ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு வார்னிங்

  • கோவை: சமூகநீதி விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். தரமற்ற உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் யாருக்கும் தயவு தாட்சண்யம் காட்டப்படாது என்றும் அவர் எச்சரித்தார்.

    Advertisement

    கோவையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஒண்டிப்புதூர் மகளிர் சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார், சிங்காநல்லூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் கிரிபிரசாத் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடன் இருந்தனர். விடுதி மாணவிகளிடம் சமூகநீதி விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    Advertisement

    ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரமற்ற உணவு வழங்கப்பட்டது குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார். ஆய்விற்கு பின்பு அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, இன்று கோவையில் சமூக நீதி விடுதிகளை ஆய்வு செய்கின்றோம். இந்த சமூக நீதி விடுதியில் உணவில் தரம் குறைவாக இருப்பதாக புகார் வந்தது, மாணவிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறியப்பட்டுள்ளது.

    மாணவிகள் விடுதியில் இருந்து பஸ் வசதி கேட்டு இருக்கின்றனர். அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என கேட்டிருக்கின்றனர். இந்த கோரிக்கைகளையும் சரிசெய்ய அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றோம். மாணவிகளின் நலனில் அக்கறை உள்ள அரசு இது. மாணவிகளுக்கு வசதிகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    Advertisement

    தரமற்ற உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கைகள் இருக்கும், இதில் தயவு தாட்சனை இருக்காது, இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. கடந்த காலங்களில் எப்படி இருந்தது என தெரியாது. எனக்கென்ன என இருக்கும் முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் கிடையாது எனவும், இனிமேல் இது மாதிரியான புகார்கள் இருக்காது.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சூடாகவே இருக்கின்றது. அனைத்து விடுதிகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கும் முயற்சிதான் ஒப்பந்ததாரர் மூலம் உணவு வழங்குவது. உணவின் தரம் உயர்த்த அதை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சமூகநீதி விடுதிகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்யலாம். மாணவிகளின் எண்கள் வாங்கி இருக்கின்றோம். விடுதிகளில் பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் கூட நடவடிக்கைகள் இருக்கும்.

    Advertisement

    சொல் வேறு செயல் வேறு அல்ல, சொல்லுக்கு முன்பு செயல் இருக்கும். ஏதாவது வசதிகள் இல்லாமல் இருந்தாலும் உடனடியாக தகவல் சொல்ல வேண்டும். ஊடகங்களுக்கு தகவல் வந்தால் அதை பெரிது படுத்தாமல் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அரசியல் கேள்விகள் கேட்டால் இந்த விடயங்கள் அமுங்கிவிடும் என்றார். இதனைதொடர்ந்து கோவையில் உள்ள மற்ற சமூக நீதி விடுதிகளை அமைச்சர் வன்னியரசு ஆய்வு செய்தார்.

    English Summary

    minister vanniyarasu: Tamil Nadu Social Justice Minister Vanniyarasu has warned of strict action against contractors who supply poor-quality food to government hostels. During an inspection in Coimbatore, he assured students that complaints would be addressed promptly and hostel facilities would be improved.