கோவை: ''பாரத பிரதமருக்கு வாழ்த்துகள் போட்டு இருந்தேன். கமெண்ட் செய்த 60 பேரில் 30 பேர் என்னை திட்டி இருக்கிறான். என்னுடைய அம்மா, பாட்டியை திட்டி இருக்காங்க.அதனை உங்களால் உணர முடிகிறதா? ஒரு பாரத பிரதமருக்கு வாழ்த்து சொல்வது குற்றமா?'' என நடிகர் ரஞ்சித் கவலையாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பாஜக தலைவர்கள் உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் ரஞ்சித்தும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் மயில்களுக்கு உணவு வழங்குவது போன்ற பிரதமர் மோடியின் போட்டோவை பகிர்ந்து, ''இதயம் நிறைந்த இனிய பிறந்தாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் அகம் மகிழ்கிறேன்.. மதிப்புமிகு பாரத பிரதமர் நரேந்தர மோடி ஜி'' என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு சிலர் நடிகர் ரஞ்சித்தை திட்டி கமெண்ட் செய்துள்ளனர். இதுதொடர்பாக நடிகர் ரஞ்சித் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் பேசும்போது கூறியதாவது: ''மதிப்புமிகு பாரத பிரதமருக்கு வாழ்த்துகள் போட்டு இருந்தேன். நேற்று இரவு திருப்பூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு 11 மணிக்கு ரூமில் உட்கார்ந்து அந்த வாழ்த்திற்கு பதில் கமெண்ட் போட உள்ளே சென்றால் கமெண்ட் செய்த 60 பேரில் 30 பேர் என்னை திட்டி இருக்கிறான். என்னுடைய அம்மா, பாட்டியை திட்டி இருக்காங்க. அதனை உங்களால் உணர முடிகிறதா? ஒரு பாரத பிரதமருக்கு வாழ்த்து சொல்வது குற்றமா? உள்ளே போய் பார்க்கும்போது எனக்கு என்ன பெரிய வேதனை என்றால் இன்று திருக்குறள் சொன்னாலும் திட்டுறான். திருவள்ளுவரை சொன்னாலும் திட்றான். முதல்வரை சொன்னாலும் திட்றான். சாமிக்கு தீபம் போட்டாலும் திட்றான். ஜாதியை திட்டினால் பிடிச்சி உள்ளே போட்டுவாங்க.. ஆனால் சாமியை திட்டினால் ஒன்றுமே சொல்லமாட்டான். சாமியை திட்டினவனுக்கு தண்டனை கிடைத்து இருக்கா? நம்ம ஊர்களில் தான் இதுபோன்ற கேவலமான செயல் இருக்கு'' என்று கூறினார். நடிகர் ரஞ்சித் முதலில் அதிமுக, பிறகு பாமக பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு அவர் தற்போது எந்த கட்சியிலும் இல்லை. பாஜகவிலும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. ஆனாலும் தொடர்ந்து பாஜகவின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் பெருமையாக ரஞ்சித் பேசி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.