அகல்விளக்கு பதிப்பக நூல்கள் வேண்டாம்... கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்து 2,000 புத்தகம் அகற்றம்

  • கோவை: பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இந்த விவகாரம் ஆளும் கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே பெரும் மோதலை உருவாக்கி உள்ள நிலையில் அகல்விளக்கு பதிப்பகத்திற்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்தில் இருந்து அதிரடியாக இன்று அகற்றப்பட்டுள்ளன.

    Advertisement

    கோவையில் கடந்த திமுக ஆட்சியில் பெரியா் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்டமாக நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் திறப்பதற்கு முன்பாகவே திமுகவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல்வர் ஜோசப் விஜய், பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார்.

    Advertisement

    இந்நிலையில் தான் தற்போது பெரியார் அறிவுலகம் பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறினார்.

    அவர் கூறுகையில், ''அகல்விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் பெரியார் அறிவுலகத்தில் ஏராளமான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பதிப்பகத்தின் நூல்கள் அதிக விலை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிப்பகத்தின் பல நூல்களில் பிழைகள் உள்ளன. தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.ஏஐ உதவியுடன் நூல்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த பதிப்பகத்தின் நூல்களை எழுதிய எழுத்தாளர்களின் பெயர்களும் சந்தேகமாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

    Advertisement

    இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான்
    பெரியார் அறிவுலகத்தில் 4வது மாடியில் தமிழ் நூல்கள் பிரிவில் 'அகல்விளக்கு' பதிப்பகத்தின் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சர்ச்சைக்கு நடுவே இன்று அந்த புத்தகங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. சுமார் 2,000க்கும் அதிகமான அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள் அகற்றப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஆளும் கட்சியான முதல்வர் விஜய்யின் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையேயான மோதலாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் வாங்கியதில் கூட முறைகேடு செய்துவிட்டதாக இருகட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியிலேயே புத்தகம் வாங்கியதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளதோடு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    மறுபுறம் திமுகவோ இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்களின் ஆட்சிக்காலத்தில் இந்த நூல்கள் வாங்கப்படவில்லை. தவெக ஆட்சியில் தான் இத்தகைய போலி நூல்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறி வருகிறார். பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட 'அகல்விளக்கு' பதிப்பகத்தின் நூல்கள் விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ள நிலையில் 2,000க்கும் அதிகமான புத்தகங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

    English Summary

    Amidst controversy, over 2,000 books from 'Agalvilakku Publications' have been abruptly removed from the Periyar Arivulagam in Coimbatore.