அதிமுகவில் அடுத்த பூகம்பம்! எடப்பாடிக்கு எதிராக வேலுமணி ரகசிய கூட்டம்? இரவோடு இரவாக பேசியது என்ன?

  • கோவை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தனர். இந்த அதிரடி முடிவு அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியது.

    Advertisement

    கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, எஸ்பி வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்தார். அதன் பின்னர், வேலுமணியின் அணியினர் மீண்டும் அதிமுகவில் இணைந்த போதிலும், அவர் முன்பு வகித்த கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் ஆகிய முக்கியப் பதவிகள் அவருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை.

    Advertisement

    கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக வேலுச்சாமி என்பவர் நியமிக்கப்பட்டார். சில காலம் பதவி ஏதுமின்றி இருந்த வேலுமணிக்கு, கடந்த வாரம் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    தொண்டாமுத்தூரில் நடந்த ரகசியக் கூட்டம்:

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நேற்று தனது சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூருக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    Advertisement

    மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கூட்ட மேடையில் அல்லது மண்டபத்தில் எங்கும் அதிமுகவின் அதிகாரப்பூர்வக் கொடிகளோ, பேனர்களோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படங்களோ வைக்கப்படவில்லை. மேடையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. கூட்டம் முடிந்தவுடன் கட்சி நிர்வாகிகளுடன் வேலுமணி ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

    கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, மேடையில் எம்.ஜி.ஆர் படம் மட்டுமே இருப்பது குறித்த கேள்விக்கு, "எங்கள் தலைவர்களான அம்மா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்கள் இங்கே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களோடு மதிய உணவு சாப்பிடவுமே நான் இங்கு வந்துள்ளேன். வரும் 2-ஆம் தேதி எம்.எல்.ஏ அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன்" என்று மிகச் சுருக்கமாகக் கூறிச் சென்றார்.

    Advertisement

    "உங்கள் முடிவே என் முடிவு" - எடப்பாடிக்கு வேலுமணி விடுத்த எச்சரிக்கை?

    இருப்பினும், இந்த மூடிய அறை கூட்டத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து அங்கு பங்கேற்ற முக்கிய அதிமுக நிர்வாகிகள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். கூட்டத்தில் பேசிய வேலுமணி, தானும் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஏன் டிவிேக கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

    திமுகவை எதிர்ப்பதற்காகவே எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. ஆனால், அதே திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சில முயற்சிகள் கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வேலுமணி கூறியுள்ளார். டிவிேக கட்சியும் திமுகவை எதிர்ப்பதால் தான் அவர்களுக்கு ஆதரவு தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    மேலும், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காதது குறித்து கவலையில்லை என்றும், ஆனால் நீண்ட காலம் கட்சிக்காக உழைத்து பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவிகளை வழங்கக் கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படாவிட்டால், தானும் கட்சி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று வேலுமணி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரை நீக்க வேண்டாம் என்று தான் அப்போதே அறிவுறுத்தியதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை கேட்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சரியான கூட்டணியை அமைக்காததே அதிமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறிய வேலுமணி, தனது எதிர்கால அரசியல் பாதை குறித்து இந்த தொகுதி நிர்வாகிகளும் மக்களும் எடுக்கும் முடிவே தனது இறுதி முடிவு என்று அறிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமைக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    English Summary

    AIADMK Crisis: Shocking claims by SP Velumani over TVK alliance and EPS split spark huge political storm