கோவைக்கு வரும் எய்ம்ஸ்! இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்.. அமைச்சர் அருண்ராஜ் கொடுத்த அப்டேட்

  • கோவை: கோவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 2வது எய்ம்ஸ் மருத்துவமனை கோவையில் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய அருண்ராஜ், விரைவில் அதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்மையில் டெல்லி சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேற்கு தமிழக மக்களின் உயர்தர மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிலத்தைத் தமிழக அரசே ஒதுக்கத் தயாராக இருக்கிறது.

    Advertisement

    எனவே, மத்திய அரசு எவ்விதத் தாமதமும் இன்றி இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் நேரடியாகவே கோரிக்கை வைத்திருந்தார். மதுரையில் 2019ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இப்போதுதான் முதற்கட்ட வளாகம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் அதுவும் முழுமையாக நிறைவு பெறவில்லை.

    2028ஆம் ஆண்டில் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழா நடக்கும் என்று சொல்லப்படுகிறது. கட்டுமான பணிகளே இன்னும் நிறைவடையாத சூழலில், அடுத்தடுத்த பணிகள் முடிவடைய இன்னும் சில காலம் பிடிக்கும் என்று தெரிகிறது. இதனால் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி கொடுத்தால், உடனடியாக பணிகள் தொடங்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில் கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கோவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக தான் இங்கு வந்துள்ளேன். மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக ஆலோசனை செய்து இடத்தை தேர்வு செய்ய வேண்டும். முதல்வர் விஜய் கோவை எய்ம்ஸ் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

    இதுதொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றால், அதற்கு இவ்வளவு இட வசதி தேவை என்ற விதிகள் இருக்கிறது. தேர்வு செய்த பின் அறிவிப்போம். மதுரை எய்ம்ஸ் நிலையை கண்காணித்து வருகிறோம். விரைவில் அதுதொடர்பாகவும் அப்டேட் கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIIMS: Following CM Vijay’s Request to PM Modi, Tamil Nadu Commences Site Selection for 2nd AIIMS in Coimbatore