கோவை: ''கரப்பான்பூச்சி கட்சி தலைவர்கள் டெல்லி போலீஸ் அலைக்கழிக்கிறார்களா? என்ற எண்ணம் எங்களுக்கு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் எழுப்பும் கேள்விகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும்போது அவர்கள் இன்னும் பெரிய தலைவர்கள் ஆவார்கள்'' என்று 'வி தீ லீடர்ஸ்' அமைப்பின் அண்ணாமலை கூறியுள்ளதோடு, டெல்லி போலீஸ் மற்றும் மத்திய அரசை சாடியுள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகி 'We The Leaders ' அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை பதிலளித்து கூறியதாவது: "நம் நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. டெல்லி காவல்துறை கரப்பான்பூச்சி கட்சியின் தலைவர்களை நடத்தக்கூடிய விதம் ஏற்புடையது அல்ல. ஜாமீன் மனு வரும்போது வழக்கறிஞர், நீதிபதியை காணோம். நீதிபதி விலகுகிறார். மீண்டும் மீண்டும் இப்படி செய்யும்போது இளைஞர்களுக்கு இந்திய அரசு மீது கோபத்தை தான் ஏற்படுத்தும். ஜாமீன் மனு, மறுபடியும் சிறையில் வைத்தது, அவர்களை மறுபடியும் சிறையில் வைப்பேன் என்றால் அவர்கள் இன்னும் பெரிய தலைவர்களாவார்கள். மகாத்மா காந்தி சிறைக்கு சென்றதால் தான் பெரிய தலைவர் ஆனார். இன்று பெரிய தலைவர்களக இருக்கும் பலரும் சிறைக்கு சென்றவர்கள். அதனால் இந்த செயலை ஏற்கமாட்டோம். அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திரும்ப திரும்ப மக்கள் பார்க்கும் அளவுக்கு தேவையின்றி கரப்பான்பூச்சி கட்சி தலைவர்கள் டெல்லி போலீஸ் அலைக்கழிக்கிறார்களா? என்ற எண்ணம் எங்களுக்கு வருகிறது. டெல்லி போலீசின் இந்த நடத்தை என்பது ஏற்புடையது அல்ல. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் செயல்பாடுகள் அல்லது அவர்கள் போராடும் முறையையோ நான் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் எழுப்ப விரும்பும் கேள்விகளின் அடிப்படையில், நான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்கள் தொடர்பான கேள்விகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அவர்களின் தலைவர்களை இன்னும் வலிமையாக்கவே உதவும். இந்த விவகாரத்தில் சட்டத்தை டெல்லி காவல்துறை தனது கையில் எடுத்து கொண்டதாகவே நினைக்கிறேன்'' என சாடியுள்ளார்.