வைஷ்ணவிக்கு பெரிய பொறுப்பு கொடுக்கும் திமுக.. செந்தில் பாலாஜியும் ஆதரவு.. பின்னணி என்ன?

  • கோவை: தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவிக்கு மாணவரணி துணைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவில் இணையாமல் இருந்திருந்தால், வைஷ்ணவிக்கு தவெகவில் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கும் என்ற செண்டிமெண்ட் திமுக உள்ளேயும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    Advertisement

    திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் கிடப்பில் போட்டாலும், இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதில் திமுக தெளிவாகவே இருக்கிறது. அதேபோல் சோசியல் மீடியாவில் திமுக கொள்கையை பேசுவோருக்கு கட்சிப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை முடிவு எடுத்துள்ளது. இதனால் திமுக இளைஞர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த வகையில் தவெகவில் இருந்து ஓராண்டுக்கு முன்பாக திமுகவில் இணைந்தவர் வைஷ்ணவி. தவெக தொடங்கப்பட்ட காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் விஜய்க்கு ஆதரவாக வீடியோக்கள் போட்டு பிரபலம் அடைந்தவர். ஆனால் தவெக மாவட்டச் செயலாளர் உடனான மோதல் காரணமாக வைஷ்ணவி, அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

    இதன்பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அழைப்பின் பெயரில் திமுகவில் ஐக்கியமாகினார் வைஷ்ணவி. திமுகவில் இணைந்த பின் வைஷ்ணவிக்கு பத்திரிகைகளும் ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அதேபோல் உதயநிதி ஸ்டாலினையும் சில முறை சந்தித்திருந்தார். சட்டசபைத் தேர்தலின் போது மகளிர் மத்தியில் வைஷ்ணவி மேற்கொண்ட பிரச்சாரம் மிகப்பெரிய ஹிட்டடித்தன.

    Advertisement

    திமுகவின் கொள்கையை வைத்து தவெகவை அட்டாக் செய்தது தமிழ்நாடு முழுவதும் டிரெண்டாகியது. இந்த நிலையில் திமுக மாணவரணி துணைச் செயலாளர் பதவியை வைஷ்ணவிக்கு கொடுக்க திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வைஷ்ணவிக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவும் இருப்பதால், எந்த சிக்கலும் இல்லை.

    ஆனாலும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பது நியாயமா என்று திமுகவில் சில குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் வைஷ்ணவி தவெகவை விட்டு திமுக பக்கம் வராமல் இருந்திருந்தால், அவர் எம்எல்ஏ கூட ஆகி இருப்பார். அவரின் நேரம் திமுக பக்கம் வந்ததால், அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது என்று கட்சிக்குள்ளும் சில ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன. இதனால் வைஷ்ணவியை தேடி விரைவில் பெரிய பொறுப்பு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    English Summary

    As per sources Former TVK Insta Influencer Vaishnavi Set to Get DMK Student Wing Deputy Secretary Post