கோவை: கோவை மாவட்டம், வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தொடர் கனமழையால் மூன்றாம் நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வால்பாறை அருகே உள்ள கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சியை காண்பதற்காக இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து சென்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அருவியில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை புலி, கரடி காட்டு மாடுகள் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன. தொடர் மழை காரணமாக யானைகள் கூட்டம் கூட்டமாக மளுக்கு பாறை, பன்னி மேடு சோலையார் முடிஸ் உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் இடம் பெயர்கின்றன. இதனால் காபி, டீ எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். மேலும் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பணிகள் யானைகளை கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். இந்த பகுதியில் சில மலையாள படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அது போல் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படம் இங்குதான் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. அது முதல் புன்னகை மன்னன் அருவி என அழைக்கப்பட்டு வருகிறது. அது போல் இருவர் திரைப்படத்தில் நறுமுகையே நறுமுகையே என்ற பாடலும் இங்குதான் படமாக்கப்பட்டது. இந்த நீர் மின் திட்டத்தில் கேரளா மின்சார வாரியம் 163 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது.