சென்னை: கோவை டாக்டர் தம்பதியினர் தங்களது மருத்துவமனை கட்டிடத்தை அடமானமாக வைத்து எல்.ஐ.சி. வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்கள். அவர்களால் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அவர்களால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இந்த சூழலில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த தனியார் பைனான்சியர்களிடம் ரூ.3.94 கோடி கடன் பெற்றனர். ஆனால் வட்டி அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில் டாக்டர் தம்பதியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கி கணக்கை முடக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளது.
பொதுவாக கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்தவர்கள் அறிய வேண்டிய விஷயம் இந்த வழக்கில் இருக்கிறது. அதுபற்றி விவரித்துவிட்டு, என்ன நடந்தது என்பதை அதன்பிறகு பார்க்கலாம். இந்தியாவில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவின் படி, ஒரு குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சொத்தையோ அல்லது வங்கிக் கணக்கையோ பறிமுதல்/முடக்கம் செய்ய போலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அந்தப் பிரிவைப் பயன்படுத்த வேண்டுமென்றால், குற்றம் நடந்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஃப்.ஐ.ஆர் போடாமல், வெறும் கந்துவட்டிப் புகாரை விசாரிக்கிறோம் என்ற பெயரில் ஒருவரின் வங்கியைக் கணக்கை முடக்குவது சட்டவிரோதமாகும். அதுதான் நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு பற்றி விரிவாக பார்ப்போம்.
கோவையைச் சேர்ந்த டாக்டர் தம்பதி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களது மருத்துவமனை கட்டிடத்தை அடமானமாக வைத்து எல்.ஐ.சி. வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அவர்களால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவர்களது சொத்தை எல்.ஐ.சி. நிறுவனம் பறிமுதல் செய்தது. இதையடுத்து, ஒரே தவணையாக ரூ.4 கோடி செலுத்துவதாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்படியே பணத்தை செலுத்தி சொத்தை டாக்டர் தம்பதி மீட்டனர். இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த தனியார் பைனான்சியர்களிடம் ரூ.3.94 கோடி கடன் பெற்றுள்ளார்கள் ஆனால், இந்த கடன் தொகைக்கு அதிக வட்டி கேட்டதால், இருதரப்புக்கும் பிரச்சினை ஆனது. இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திலும் டாக்டர் தம்பதி புகார் அளித்தனர்.இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து கந்து வட்டி கேட்டவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் கோவை டாக்டர் தம்பதியினரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து காவல்துறையினர் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், டாக்டர்கள் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர்கள் தரப்பில் மூத்த வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் வாதிடுகையில், "ஆன்லைன் மோசடி வழக்குகளை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல், வங்கி கணக்கை முடக்கம் செய்ய போலீசாருக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து டி.ஜி.பி. சுற்றறிக்கை இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. அதை மதிக்காமல் கோவை போலீசார் செயல்பட்டிருக்கிறார்கள். சொத்தை அபகரிக்க நினைக்கும் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்கள். கணக்கு முடக்கப்பட்டதால் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு கடனை அடைக்க மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்கள் என்றார். காவல்துறை தரப்பில் வாதிட்ட வக்கீல், "தனியார் பைனான்சியர்கள் நலனைப் பாதுகாக்கும் நோக்கில்தான் டாக்டர்கள் வங்கி கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்" என்று விளக்கம் அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆன்லைன் மோசடி விவகாரங்களைத் தவிர, பிற வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வங்கி கணக்கை முடக்கும்படி, போலீசார் வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது" என்று உத்தரவிட்டார். வங்கி கணக்கை இயக்கவும், கடன் தொகையை திருப்பி செலுத்துவது தொடர்பாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.