சம்பளத்தில் சட்டவிரோத பணப்பிடித்தம்.. பாரதியார் பல்கலை. தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு

  • சென்னை: கோவை பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதச் செயல்களைக் கண்டித்து இன்று முதல் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம் என பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் பங்களிப்புத் தொகை என்று சொல்லி சட்டவிரோதமாகத் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து ரூ.1,000 முதல் ரூ.3,000 பிடித்தம் செய்யப்பட்டதாகவும், இது பற்றி தெரிவித்தும் இந்த மாதமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு வகைகளிலும் முறைகேடு நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. குறிப்பாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் சம்பளத்தில் ரூ.1,000 முதல் ரூ. 3,000 பிடித்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

    இஎஸ்ஐ, பிஎஃப், காப்பீடு போன்றவற்றில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிரவைத்து இருக்கிறது. இது தொடர்பாக உள்ளிருப்பு போராட்டத்தையும் தொழிலாளர் சங்கம் அறிவித்து நோட்டீஸ் கொடுத்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

    நமது ESI என்று - பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் சென்ற (ஜூலை 2026) மாதத்திற்கான தொழிலாளர் பங்களிப்புத் தொகை (நவம்பர் 2019 முதல் மார்ச் 2025 வரை) என்று சொல்லி சட்டவிரோதமாகத் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை (ரூபாய் 1000/- முதல் 3000/- வரை) திருப்பிக் கொடுக்கக் கோரி எங்களது தொழிற்சங்கம், நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டது.

    Advertisement

    ஆனால், எங்களது தொழிற்சங்கத்தின் நியாயமான தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையைப் பல்கலைக்கழக நிர்வாகம் செய்து கொடுக்காமல் மீண்டும் இந்த மாதம் (ஆகஸ்ட் 2026) தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து ரூபாய் 500/- பிடித்தம் செய்திருப்பது தொழிற்சங்கச் சட்டம் மற்றும் ESI சட்டங்களை அவமதிப்பதாகும்.

    எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதச் செயல்களைக் கண்டித்து 07.09.2026 மாலை 05.30 மணி முதல் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக உள்ளிருப்புப் போராட்டம் எங்களது சங்கம் நடத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Bharathiar University Employees' Union has announced that it will stage a continuous sit-in protest at the university starting today to condemn the university administration's anti-worker actions.