Coimbatore: நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. சாகுற வயசா இது? கோவையில் 13 வயது சிறுவன் கொன்று புதைப்பு!

  • கோவை: "இதோ மீன் பிடித்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன்" என்று துள்ளிக் குதித்து விளையாடச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவன், சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் கோவை இருகூர் பகுதியில் ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 13 வயது மகன், ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், கடந்த 15-ஆம் தேதி பிற்பகலில் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.

    Advertisement

    ஆசையாய் மீன் பிடிக்கச் சென்ற இடத்தில், சிறுவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சக நண்பர்கள் இருவர், அங்கிருந்த காலி மதுபாட்டிலால் அந்த 13 வயது சிறுவனின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

    இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன், துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறிய பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், தாங்கள் செய்த கொடூரத்தை மறைக்க நினைத்த அந்தச் சிறுவர்கள், "யாரோ ஒரு மர்ம நபருடன் அவன் தனியாகச் சென்றான்" என்று கூறி பெற்றோரை நம்ப வைத்துள்ளனர்.

    Advertisement

    மகனைக் காணாமல் தவித்த பெற்றோர், நெஞ்சு துடிக்கச் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையைத் கையில் எடுத்து, அந்தச் சிறுவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான், பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்த திடுக்கிடும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

    சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, இன்று (மே 18) காலை சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவனின் உடலைத் தோண்டி எடுத்தனர். தன் பிள்ளை ஏதோ விளையாடத்தான் சென்றிருக்கிறான் என்று நம்பிய பெற்றோர், அவன் மண்ணுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கடித்தது.

    Advertisement

    மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிப் பருவத்தில், விளையாடும் வயதில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட கோபத்தால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனதும், சக சிறுவர்களே இந்த விபரீதத்தைச் செய்திருப்பதும் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English Summary

    A heartbreaking incident in Irugur has left residents in tears after a Class 7 student, who reportedly told his family “I’ll return soon after fishing,” was later found dead. The tragic incident has deeply shocked the local community.