நீட் தேர்வு ரத்தால் மன உளைச்சல்.. கோவை 19 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • கோவை: மருத்துவர் கனவுடன் இருக்கும் பல மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில கட்சிகளுமே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 19 வயது மாணவி தற்கொலை செய்துள்ளார். உயிரிழப்புக்கு முன்பாக அந்த மாணவி தன் உறவினருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம், கோவைப்புதூர் அருகில் உள்ள பார்க் டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அனுகீர்த்தனாவின் லட்சியம்.

    மாணவி தற்கொலை

    இதற்காக கடந்தாண்டு ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். நீட் தேர்வும் எழுதியிருந்தார். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக கீர்த்தனா ஆர்வத்துடன்
    காத்துக் கொண்டிருந்தார். முறைகேடுகள் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்.

    இந்த அறிவிப்பு அனுகீர்த்தனாவுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா என்று அவர் பயந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அனுகீர்த்தனா தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு, உடல்வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அனுகீர்த்தனா அனுப்பிய வாட்ஸ் அப் தகவலைப் பார்த்து பதறிய அவரின் சித்தப்பா பதறியுள்ளார்.

    நீட் தேர்வால் தொடரும் சோகம்

    பதறியடித்து அவர் அனுகீர்த்தனாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மயக்கத்தில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவ சிகிச்சைக்கு பலனளிக்காமல் அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாதன் செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில், "எங்கள் கட்சி குடும்பத்தை சார்ந்த டாஸ்மாக் பணியாளர் செந்தில் பிரபுவின் மகள் அனுகீர்த்தனா நீட் தேர்விற்கு தயாராகி கொண்டு இருந்தார்.

    ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய நிலையில்,மீண்டும் நீட் தேர்வு என்பதால் கடும் மன அழுத்தத்தில் இருந்தார். நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பதால் ரத்து செய்தது 21 லட்சம் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சிபிஎம் கட்சி சார்பில் கோவையில் போராட்டமும் நடத்தப்பட்டது.

    English Summary

    Coimbatore 19 year old girl died by suicide over Neet exam fear. CPIM Party conducted protest over the incident.