கோவை: கோவை ஜோதிடர் கார்த்திகேயன் மீது அடுத்தடுத்து பெண்கள் புகார் கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணப் பரிகாரம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த பெண் புகார் கொடுத்திருந்தார்.. அவரை தொடர்ந்து இப்போது சென்னை பெண் இன்ஜினியரும் கார்த்திகேயன் மீது புகார் தந்துள்ளார்.. என்ன நடந்தது?
திருப்பூரை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் கார்த்திகேயன் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை சரக போலீஸ் ஐஜியிடம் புகார் அளித்திருந்தார்.
அந்தப் பெண்ணின் திருமணத்துக்காக பெற்றோர் நீண்டகாலமாக வரன் பார்த்தும் எதுவும் சரியாக அமையவில்லையாம். அதனால் அந்த பெண் மனஉளைச்சலில் இருந்தபோது, நண்பர் ஒருவர் மூலம் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு ஜோதிடர் கார்த்திகேயனை சந்தித்துள்ளார். சில பரிகாரங்களை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்று கார்த்திகேயன் சொன்னாராம்.. அதுமட்டுமல்ல, பரிகாரம் செய்வதாகக் கூறி, அப்பெண்ணை பலமுறை சந்தித்த கார்த்திகேயன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவிலும் ஈடுபட்டு விட்டாராம்.. அதுமட்டுமல்லாமல், தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாகக் கூறி திருமணத்துக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தையும், உறவினர் விபத்தில் சிக்கிவிட்டதாகக் கூறி ரூ.1.50 லட்சத்தையும் பெண்ணிடமிருந்து பெற்றிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகு பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.. இதுகுறித்து விசாரித்தபோதுதான், கார்த்திகேயனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாராம்.. இறுதியில், கோவை ஐஜியிடம் மேற்கண்ட புகார்களையெல்லாம் கூறி, மனு தந்தார். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மற்றொரு பெண் இன்ஜினியரும் கார்த்திகேயன் மீது புகார் அளித்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் இன்ஜினியர், தாம்பரம் இணை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: "எனது பெற்றோருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் குடும்பப் பிரச்சினைகளும் ஏற்பட்டு வந்தன. இதனால் யூடியூப் மூலம் ஜோதிடப் பலன்களைப் பார்த்தபோது, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதி காலனியைச் சேர்ந்த ஜோதிடர் கார்த்திகேயன் அறிமுகமானார். அவரை செல்போனில் தொடர்புகொண்டு ஜோதிடப் பலன்களைக் கேட்டபோது, எனது தந்தையின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறினார். அதற்கு சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகிய இடங்களில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சென்னைக்கு வந்து எனது வீட்டிலேயே சிறப்புப் பூஜைகளை நடத்தினார். பின்னர் எனக்குத் திருமண தோஷம் இருப்பதாகக் கூறி, என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். நான் அதற்கு உடன்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து செல்போனில் என்னிடம் பேசிய அவர், "உன்னைத்தான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன், ஏமாற்ற மாட்டேன்" என்று வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஒரு விடுதிக்கு என்னை அழைத்துச் சென்று, எனது விருப்பத்திற்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு எனது தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினார். ஜோதிட நம்பிக்கையைப் பயன்படுத்தி எனது வாழ்க்கையைச் சீரழித்த கார்த்திகேயன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஒரு பெண் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது பெண் இன்ஜினியரும் புகார் அளித்திருப்பது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!கோவை ஜோதிடர் கார்த்திகேயன்
கடன் பிரச்சனை - சேமிப்பு பணம்
பெண் என்ஜினியர் புகார் மனு
சென்னை லாட்ஜில் பலாத்காரம்