கோவை: கோவை திருமண மோசடி புகார் இப்போது கவனம் பெற்றுள்ளது.. மறுமணத்துக்காக மேட்ரிமோனியில் பதிவு செய்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார் ஒரு தொழிலதிபர்.. அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொள்வதாக உறுதி தந்துள்ளார்.. கடைசியில் விஷயம் வேறு மாதிரி திரும்பி விட்ட நிலையில், அந்த பெண் இப்போது கோவை பீளமேடு போலீசில் புகார் தந்துள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 32 வயதாகிறது.. கோவை பீளமேடு போலீசில் திடீரென ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
"எனக்கு 32 வயதாகிறது.. துணி வியாபாரம் மற்றும் மருத்துவமனைகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதனால் மறுமணம் செய்து கொள்வதற்காக 2024-ம் ஆண்டு எனது உறவினர்கள் மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தனர். 2025-ம் ஆண்டு திருப்பூர் ராயபுரம், ரங்கநாதபுரம் 2-வது வீதியைச் சேர்ந்த ராம்குமார் (45) என்பவர் தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். தான் கோவையில் தனியாக வசிப்பதாகவும், பெற்றோர் உயிரிழந்துவிட்டதாகவும், சகோதரிகளுடன் தொடர்பில்லை என்றும் கூறி என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அடிக்கடி என்னிடம் பேசி வந்தார். அப்போது திடீரென அவசர தேவை என கூறி என்னிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி, அடுத்த நாளே திருப்பிக் கொடுத்தார். பின்னர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் என்னையும், என்னுடைய 2 மகன்களையும் மற்றும் சகோதரர்களையும் சந்தித்து பேசினார். பிறகு என்னுடைய வீட்டிற்கே வந்து திருமணம் செய்வதாக ராம்குமார் உறுதியளித்தார். அதன்பிறகு ராம்குமார் பிசினஸ் செய்வதற்கு அவசர தேவை எனக் கூறி ரூ.5 லட்சம் கேட்டார். இதனால் எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்தைக் கொடுத்தேன். இப்படிப்பட்ட சூழலில், ராம்குமார் எனது உறவினர் ஒருவருக்கும் மேட்ரிமோனியல் மூலம் திருமண விருப்பம் அனுப்பியிருந்தார்... இதுகுறித்து ராம்குமாரிடம் கேட்டபோது, தனது அக்கா அனுப்பியிருப்பார் என்றார்.. இதற்கு பிறகு, ராம்குமாரின் பிறந்த நாளில் நான் 2 பவுன் தங்க செயினை அவருக்கு பரிசளித்து திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன். அவரும் குடும்பத்தினர் முன்னிலையில் டிசம்பர் 14, 2025 அன்று திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இதன்பின், ராம்குமார் தொழிலில் நஷ்டம் என்று சொல்லி, 5 பவுன் நகைகளையும், ரூ.10 லட்சத்தையும் பெற்றுக்கொண்டார். ஆனால் அதற்கு பிறகு என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதுகுறித்து நான் கேட்டதற்கும் சரியாக பதில் சொல்லவில்லை,. திடீரென ஒரு நாள் ராம்குமார் என் வீட்டிற்கு வந்து திருமணம் ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டே ஆசைவார்த்தைகளை கூறி என்னுடன் உறவு கொள்ள முயன்றார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். ஆனாலும், என்னுடைய கைகளைக் கட்டி, தாக்கி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.. அத்துடன், தனக்கு ரூ.1 கோடி கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டி சென்றார். அவரிடம் கிடைத்த ஆதார் அட்டையை வைத்து ராம்குமாரை பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அவருக்கு 5 வருடங்களுக்கு முன்பே வைதேகி என்ற பெண்ணுடன் திருமணமானது தெரியவந்தது.. சென்னையைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணையும் இதுபோலவே ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான், எனது சகோதரருடன் திருப்பூரில் உள்ள ராம்குமாரின் குடோனுக்கு சென்று பணத்தையும், நகைகளையும் திருப்பிக் கேட்டோம். அப்போது ராம்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி, என்னுடன் இருந்த போட்டோடக்களை, ஆபாச வெப்சைட்டிகளில் பதிவேற்றி விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி வைதேகி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகியோரும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். எனவே, ராம்குமார், அவரது மனைவி வைதேகி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. அந்த விசாரணையில், ராம்குமார் சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்ததாக தெரிகிறது.. மேலும், திருப்பூரில் தோல் ஏற்றுமதி செய்து வருவதாகவும், இதேபோல் பல பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றியதும் விசாரணையில் உறுதியானது.. இதையடுத்து ராம்குமார், அவரது மனைவி வைதேகி மற்றும் மாமனார் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்போது ராம்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..கோவை தொழிலதிபர்
மேட்ரிமோனியல் பதிவு
லட்சக்கணக்கில் பணம்
விதவைகளை பலாத்காரம்
3 பேரை கைது செய்த போலீஸ்