கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. சிறை கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. தேனி தேக்கம்பட்டி சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி சென்று, பிறகு கைது செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் தப்பி சென்றார். இந்த விவகாரத்தில் 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் ராகவன் (வயது 25). இவர் மீது தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரை அன்னூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அன்னூர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று இரவு கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார். சிறை வாளாகத்தில் இருந்து கைதி ராகவன் திடீரென தப்பி ஓடினார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது, "30.10.2026 இரவு 11 மணியளவில், ராகவன் என்கிற கோழிக்காரன் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். 31.10.2026 நள்ளிரவு 12.40 மணியளவில், மத்திய சிறையில் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களைத் தள்ளிவிட்டு காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார். உடனடியாக, கோவை மாநகர காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் பணியினருடன் ஒருங்கிணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. தப்பி சென்ற கைதியைக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்காக உயர் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர வாகனச் சோதனைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தப்பிச் சென்ற கைதியை விரைவில் கைது செய்வதற்கு ஏதுவாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து காவல் பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கைதியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளனர். ராகவன் இதற்கு முன்பும் ஒருமுறை காவல்துறையிடம் இருந்து தப்பித்துள்ளார். அப்படியும் அவரை சரியாக பாதுகாக்காதது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.வாகன சோதனை ட்ரோன் கண்காணிப்பு
4 காவலர்கள் சஸ்பெண்ட்