கோவையில் உயிரை மாய்த்துக்கொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்.. சாதியை சொல்லி கிண்டல் செய்ததால் விரக்தி!

  • கோவை: கோவையில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவன் படிக்கும் பள்ளியில் சக மாணவர்கள் சாதி பெயரைச் சொல்லி கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவை பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவுசல்யா தேவி. இவர்களுக்கு அகிலன் (16 வயது) என்ற மகன் இருந்தார். அகிலன் பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த பின்னர் நேற்று காலையில் அகிலன் பள்ளிக்கு சென்றார். பள்ளி தொடங்குவதற்கு முன்பு பிரார்த்தனை நேரம் நடக்கும்போது சக மாணவர்கள் அகிலனை சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவர் அகிலன் வீட்டுக்கு சென்றுவிட்டார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் அகிலன் தனியாக இருந்தார்.

    மாணவர்கள் தொடர்ந்து பல நாட்களாக சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்து வந்ததால் கடுமையாக விரக்தியடைந்த அகிலன் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    பள்ளியில் வகுப்பு ஆசிரியர், எஸ்.சி உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளது யார் யார் எனக் கேட்டதற்கு மாணவர் கூறியுள்ளார். அப்போது முதல், அகிலனை சில மாணவர்கள் தனிமைப்படுத்தி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. பள்ளிக்குச் செல்லமாட்டேன் எனக் கூறிய மாணவனை அவரது பெற்றோர் இன்னும் சில மாதங்கள் மட்டும் போ, பிளஸ் 1வுக்கு வேறு பள்ளி மாற்றி விடுவதாக கூறியுள்ளனர். இந்தச் சூழலில் தான் நேற்று மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் அகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    An 11th-grade student at a private school in Coimbatore has died by suicide. Reports suggest that the student took his own life after being taunted by his peers at the school, who mocked him by referencing his caste.