கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள செம்மொழி பூங்கா திட்டப்பணிகள் தொடர்பான ஊழல் புகார், மாநில அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது, திட்டத்தின் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை மீது கடுமையான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
கோவை கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் 40 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதம், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு அந்த சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "கோவையில் செம்மொழி பூங்கா கட்ட ரூ.45 கோடிக்கு மட்டுமே திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதன் பின்னர், கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில், சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சி நிதியில் கூடுதல் எஸ்டிமேட் என்ற பெயரில் கூடுதல் கொள்ளை நடந்துள்ளது. திட்டப்பட்டியலில் இல்லாத பல பொருட்களை பயன்படுத்தி 45 கோடி ரூபாய்க்கு பதில் 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மாநகராட்சி பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி, தனியார் வல்லுநர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தால் போலி பில் போட்டு ரூ.40 கோடிக்கு மேல் கொள்ளை அடித்தது வெளிச்சத்திற்கு வரும். தேர்தல் செலவிற்கு பணம் தேவை என்பதால் 5 ஆண்டுக்குள் போட்ட ரோடுகளையே பெரும்பாலும் தேர்வு செய்து அதனை திரும்ப போடுவது போல் நடித்து 50 சதவீதம் பணி செய்து 100 சதவீதத்திற்கு மேல் பில் போட்டு உள்ளனர். கடந்த 6 மாதத்தில் நடந்த பணிகளை மறு ஆய்வு செய்து அதன் தரம் மற்றும் அளவை சரிபார்ப்பதுடன் தவறு இருக்கும் பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழி பூங்காவிற்கு முதலில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு எவ்வளவு, அதன்பின்னர் தற்போது வரையிலான செலவினம் எவ்வளவு என பார்த்து அதன் முழு உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதில் மதிப்பீடு தயாரித்தவர். பணியை பார்த்து போலி பில் தயாரித்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் மற்றும் தேர்தல் நேரத்தில் 50 சதவீதம் மட்டும் பணி செய்து போலி பில் பெற்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கோவை செம்மொழி பூங்கா
40 கோடி ரூபாய் வரை ஊழல்
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருக்கு புகார்