கள்ளக்குறிச்சி: கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போதை பொருள் கும்பல் குறித்து புகார் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். அவர் வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. மாணவனின் வீட்டிற்கு சென்று அமைச்சர்கள் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள். இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட தப்பிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் கூறியுள்ளார்.
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவன் அமுதன், கடந்த வாரம் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை, கல்லூரி நிர்வாகம் குறித்து அமுதன் பெற்றோர் பல்வேறு புகார்களை வைத்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள அமுதன் வீட்டுக்கு அமைச்சர்கள் வன்னி அரசு, கோவை பொறுப்பு அமைச்சர் சம்பத்குமார் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மாணவன் அமுதன் குடும்பத்தினருக்கு முதல்கட்டமாக ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நியாயமான முறையில், நேர்த்தியாக நடத்தப்படும். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்த ஒருவர் கூட தப்பிக்க முடியாதளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற சம்பவங்களில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார்களோ, அத்தனை பேரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் அனைவர் மீதும் கடுமையான விசாரணை மூலம் உண்மையை வெளி கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காவல்துறைக்கு எந்த நிர்பந்தமும் யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் ஃப்ரீ ஹேண்டாக தான் செயல்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியதும், குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி கொடுப்பதும் தான் அவர்களின் கடமையாக உள்ளது. எந்த ஒரு நிர்பந்தமும், யாரும் கொடுப்பதில்லை. காவல்துறையினர் எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார்கள். யார் புகார் அளித்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் அமுதன் வழக்கிலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அமைச்சர் வன்னிஅரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்தால், எப்ஐஆர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படும். குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தவுடன் ரூ.6 லட்சம் வழங்கப்படும். முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவர் குடும்பத்திற்கு ரூ. லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அமுதனின் தம்பிக்கு அரசு வேலை வழங்கப்படும். அவரின் அம்மாவுக்கு பென்ஷன், வீட்டு மனை பட்டா கொடுக்கப்படும். அமுதனின் குடும்பத்தினருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். குற்றம் செய்த அனைவருக்கும் தண்டனை வாங்கி கொடுப்போம்" என்றார்.அனைவருக்கும் தண்டனை
அரசு வேலை, பட்டா