கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் மாவட்ட ஆட்சியருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சாட்சி சொல்வதற்காக மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து ஆஜராகி இருந்தார்.
ஆனால், அரசு தரப்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் அரசு வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதால், அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நத்த முடியாமல் போனதுடன், வழக்கு விசாரணையும் தாமதமானது. மேலும், தேவையின்றி கேரளாவில் இருந்து வந்த மருத்துவருக்கும் சிரமம் ஏற்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. அரசு தரப்பின் அலட்சியம் காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டதால் இதுபோன்ற தவறுகளை நீதிமன்றம் ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் தொகையினை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், இந்தத் தொகை நீதிமன்றத்தில் ஆஜரான மருத்துவரின் வருகை செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பணிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய அரசு வழக்கறிஞர்கள் கோவை நீதிமன்றங்களில் இன்னும் நியமிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.