மாட்டுக்கறி சாப்பிடுவியா? மாணவர் உயிரை பறித்த ஒற்றை வார்த்தை! ஆசிரியர் அதிரடி கைது!

  • கோயம்புத்தூர்: கோவையில் பட்டியல் சமூக பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில், ஆசிரியர் விஜயகுமார் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் அகிலன் 11ம் வகுப்பு படித்து வந்தார். வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது அகிலன் உட்பட 2 மாணவர்கள் கையை உயர்த்தியிருக்கின்றனர். இதை பார்த்த சக மாணவர்களில் சிலர், அகிலனை சாதி பெயர் சொல்லியும், உணவு பழக்க வழக்கத்தை சொல்லியும் கேலி செய்து தாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்த விஷயத்தை அகிலன் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அவர்களும் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் முறையிட்டிருக்கின்றனர். ஆனால், நேற்று அகிலன் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

    தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும், சாதிய வன்கொடுமையை தடுக்க அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அகிலனின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து, தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், மாணவர்களிடம் உணவு குறித்து கேள்வி எழுப்பிய ஆசிரியர் விஜயகுமார், சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட 2 மாணவர்கள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். வழக்குப்பதிவை தொடர்ந்து, ஆசிரியர் விஜயகுமாரை போலீசார் இன்று கைது செய்திருக்கின்றனர்.

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் என்னதாக மார்டனாக டெவலப் ஆகியிருந்தாலும்.. இன்னமும் சாதிய வன்மம் கொண்டவர்கள் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியானவர்களால் தற்போது மாணவர் ஒருவரின் உயிர் பிரிந்திருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

    மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வுகள் என்பது காலங்காலமாக நீடித்து வருகிறது. பெற்றோர்களை, உறவினர்களை பார்த்துதான் மாணவர்கள் வளர்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் சாதிய உணர்வாளர்களாக இருப்பதால்தான், பிள்ளைகள் மனதிலும் சாதிய வன்மம் ஊடுருவுகிறது. இதை நாம் நினைத்தால் தடுக்க முடியும். அதற்காகத்தான் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டன.

    இந்த கமிட்டி, பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க சில பரிந்துரைகளை கொடுத்தது. உதாரணத்திற்கு வண்ண நிறங்களில் கயிறுகளை கட்டி வருவது, நெற்றியில் குறிப்பிட்ட நிறத்தில் வைக்கப்படும் பொட்டு.. குறிப்பிட்ட ஒரு சாதியை மட்டும் அடையாளப்படுத்துவதாக இருப்பதாகவும், எனவே அவற்றை அனுமதிக்க கூடாது எனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதேபோல பள்ளி வர பயன்படுத்தும் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் இடம் பெற்றிருக்கும் சாதிய வாசகங்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று நீதிபதி கொடுத்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், இந்த பரிந்துரைகள் இப்போது வரை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதன் மூலம், பள்ளி மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகளை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Coimbatore Dalit Student: In the case involving the suicide of a school student named Akilan—who belonged to a Scheduled Caste—in Coimbatore, teacher Vijayakumar has been promptly arrested.