கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்றனர். திமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்கிறது. அந்த நெருக்கடிக்கு மத்தியில் கோவை திமுகவிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைமைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதால் நிர்வாகிகள் அவருக்கு எதிராக திரண்டுள்ளனர்.
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து மொத்த நாட்டையும் தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. தவெகவின் எழுச்சியால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு கால திராவிட அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பெரும்பாலான மூத்த நிர்வாகிகள் தவெகவுக்கு மாறியுள்ளனர். தேர்தல் தோல்வியால் திமுகவிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து திமுக மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. நிர்வாக அடிப்படையில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்பதற்கான வயது வரம்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கள ஆய்வு செய்து மாற்றம் செய்வதற்காக 76 மாவட்ட பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை திமுக நிர்வாக ரீதியாக 3 மாவட்டங்களாக இருந்தது. தற்போது அது 5 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவுள்ளனர். கோவை மாவட்டத்துக்கு மகளிர் தொண்டரணி மாநில துணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினியும், விளையாட்டு மேம்பாடு அணி துணை செயலாளருமான எஸ்.ஆர் பார்த்திபன் மறுசீரமைப்புக்கான கோவை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கோவையில் கள ஆய்வு செய்து வருகிறார்கள். கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 3 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கூட்டம் நடைபெற்றது. கோவையை பொறுத்தவரை செந்தில் பாலாஜி இல்லாமல் எதுவும் அசையாது. ஆனால் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி கலந்து கொள்ளவில்லை இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை திமுக நிர்வாகிகள் கூறுகையில், "திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தேர்தலுக்கு முன்பாக கோவைக்கு குடிபெயர்ந்தார். தேர்தலில் வெற்ற பெற்ற பிறகு அவர் கோவைக்கு வருவதே இல்லை. கோவை மாவட்டம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென செந்தில் பாலாஜி நினைக்கிறார். பார்வையாளர்கள் களத்தில் ஆய்வு செய்து கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யப்படும். அதற்கு முன்னதாக அவர் மாவட்ட செயலாளர்களை அழைத்து தனக்கு ஏற்றப்படி கிளை, பகுதி ஒன்றியம், நகரம் ஆகியவற்றை பிரிக்க சொல்லியுள்ளார். இது கட்சி தலைமையை ஏமாற்றும் செயல். கோவைக்கு யார் பொறுப்பாளராக வந்தாலும் நான் சொல்வது தான் நடக்கும். நான் சொல்லும்இடத்தில் கையெழுத்து போடுவார்கள். தலைமையும் அதை ஏற்கும் என்று நினைக்கிறார். செந்தில் பாலாஜியின் செயலால் பார்வையாளர்கள் அதிருப்தியாக, செயற்குழுவில் தங்களின் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் மூத்த நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல செயல்படுவதால் கடந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அரசியல் களம் மாறிவிட்டது. அதை உணர்ந்து மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்சிக்கு பாதிப்பு அதிகரிக்கும். செந்தில் பாலாஜி மீது மூத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து தலைமையில் புகார் கொடுப்போம்" என்றனர்.கோவை திமுகவில் மாற்றம்
விடாத செந்தில் பாலாஜி
ஒன்றிணைந்த நிர்வாகிகள்