கோவை மாமன்ற திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்.. ‘பார்ட்டி ஃபண்ட்’ வாங்கியதாக குற்றச்சாட்டு

  • கோவை: கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலரான பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என்றும், கட்சி நிர்வாகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    கவுன்சிலர் பாபு, திமுகவில் கோவை வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கவுன்சிலர் பாபு, "திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, நிதி மேலாண்மையில் கரெக்ட்டாக இருப்பார் என்றுதான் அவரை நியமித்துள்ளனர்.

    Advertisement

    கட்சியை வளர்ப்பதற்காக செந்தில் பாலாஜியை கோவை மண்டல பொறுப்பாளராக நியமிக்கவில்லை. சரியாக கலெக்‌ஷன் செய்து மேலே தர வேண்டும் என்பதற்காகவே நியமித்துள்ளனர். அவருக்கு அடிமைகளாக இருப்பவர்களுக்கு மட்டுமே பதவிகளைத் தந்தார். ஆபீஸ் போட்டு பார்ட்டி ஃபண்ட் வசூல் செய்தார்கள்.

    திமுகவை வைத்து எந்த மக்கள் பணியையும் செய்ய முடியாது. என்ன திட்டம் என்றாலும் 'பார்ட்டி ஃபண்ட்' கொடுக்க வேண்டும். எந்தப் பணி செய்ய வேண்டும் என்றாலும் லஞ்சம் தர வேண்டும் என்ற நிலை உள்ளது. 5 வருடங்களாக ப்ரைஸ் டேக் போட்டுத்தான் ஆட்சியே நடத்தினார்கள். இன்று தவெக அரசு வந்த பிறகு அது சுத்தமாக இல்லை.

    Advertisement

    திமுகவில் சாமானிய தொண்டர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. இளைஞர்களுக்கும் இடமில்லை. திமுகவில் எளியவர்களுக்கும் இடமில்லை. எனவே, இனியும் திமுகவில் தொடர்வதில் அர்த்தம் இல்லை என்கிற முடிவோடு இன்றிலிருந்து நானும் எனது நண்பர்களும் திமுகவிலிருந்து விலகுகிறோம்.

    திமுக சாமானியர்களின் கட்சியாக இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறி இருக்கிறது. இங்கே சாமானியன் ஒருவன் வெறும் வாக்காளனாகவோ அல்லது கட்சியின் அடிமட்டத் தொண்டனாகவோ இருக்கலாமே தவிர எந்தக் காலத்திலும் உண்மையான மக்கள் தொண்டாற்றுகிற பொறுப்புக்கோ, உயர் பதவிக்கோ வரவே முடியாது என்கிற அளவிற்கு கட்சியும் கட்சித் தலைமையும் சாமானியர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது.

    Advertisement

    இப்போதும் கூட எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதியும் மூத்த தலைவர்கள் அவர் பின்னாலும் நிற்கிறார்கள். இது எப்படி சமூக நீதி ஆகும்? மன்னராதிக்கமாக, முதலாளித்துவ கட்சியாக திமுக மாறிப் போனதற்கு இதுவே அடையாளமாகும். இன்னும் ஒரு வாரத்திற்குள் திமுகவைச் சேர்ந்த பல கவுன்சிலர்களும், கட்சி நிர்வாகிகளும் விலக உள்ளனர்.

    கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்."என்றும் பாபு தெரிவித்துள்ளார். திமுக கவுன்சிலரின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Coimbatore Corporation DMK councilor Babu has announced his resignation from the party's primary membership. He has announced his departure, alleging that there is no recognition for democracy or hard work within the DMK.