மொத்தமாக மாறும் காந்திபுரம் பேருந்து நிலையம்.. செம ஹைடெக்காக மாற்ற கோவை மாநகராட்சி திட்டம்

  • கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. கல்வி, தொழில், மருத்துவம், ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை வளர்ச்சியடைந்து வருகிறது. கோவையின் உள்கட்டடைப்பு வசதி மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தை கட்டி 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் சேதமடைந்திருப்பதால் அடிப்படை வசதி கூட சரியாக இல்லை. அந்த பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, நவீனமுறையில் புதிதாக கட்ட கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    Advertisement

    கோவையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபாகோவில் பகுதிகளில் பேருந்து நிலையம் உள்ளது. காந்திபுரத்தில் நகர பேருந்து நிலையம், வெளியூர் செல்வதற்கான மத்திய பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் உள்ளது. ஆனைகட்டி, திருப்பூர், மேட்டுப்பாளையம், சத்தி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 3.5 ஏக்கர் பரப்பளவில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இது கடந்த 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

    Advertisement

    காந்திபுரம் பேருந்து நிலையம்

    பேருந்து நிலையம் கட்டி 52 வருடங்களாகிவிட்டது. மேற்கூரை, பிளாட்பார்ம்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அதில் தினசரி 998 பேருந்துகள் இயங்குகின்றன. பேருந்து நிலையத்தை சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பேருந்து நிலையத்தில் இருக்கைகள், கழிப்பறைகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். மாநகரின் இதய பகுதியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. பேருந்துகள் வந்து செல்வதற்கு சிரமப்படுகின்றன.

    இதற்காக சென்னை ஐஐடி தொழில்நுட்ப குழுவினர் நேரில் ஆய்வு செய்து வடிவமைத்தனர். கடந்த திமுக ஆட்சியிலேயே திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி காந்திபுரம் பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்துவிட்டு ரூ.35 கோடி மதிப்பில் நவீனமுறையில் புதிதாக கட்டப்படவுள்ளது. கீழ்தளம் (பேஸ்மென்ட்), தரைத்தளம், முதல்தளம், மொட்டை மாடி அமைக்கப்படுகிறது.

    Advertisement

    ரூ.35 கோடியில் நவீனம்

    கீழ்தளத்தில் 2,014 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங், தரை தளத்தில் நுழைவுவாயில், வெளியேற்ற பகுதி, 4 பிளாட்பார்ம்களில் 70 பஸ்கள் நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் குளிர்சாதன வசதியுடன் 5 காத்திருப்போர் அறை, 45 கடைகள், 6 கழிப்பறைகள், 3 டிக்கெட் கவுன்டர்கள், லாக்கர் ரூம், பாலூட்டும் அறை, ஆடியோ வீடியோ ரூம், துறை அலுவலகம், தபால் அலுவலகம், சிசிடிவி கட்டுப்பாட்டு அறை அமைகிறது.

    மொட்டை மாடியில் மழைநீர் சேமிப்பு அமைகிறது. 6 இடங்களில் படிக்கட்டுகள், லிப்ட் வசதி செய்யப்படுகிறது. உள்ளூர் திட்ட குழுமத்தின் அனுமதிக்காக மாநகராட்சி அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் டெண்டர் கோரி கவுன்சிலில் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கும். பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்தால், மத்திய சிறைச்சாலை அருகே தற்காலிகமாக பேருந்து நிலையத்தை மாற்ற திட்டமிட்டுள்ளனர். மக்கள், அரசுத்துகளின் கருத்து கேட்டு இறுதி முடிவு செய்யப்படும்.

    English Summary

    Coimbatore Gandhipuram Central Bus Stand to demolish. Corporation administration to renovate Rs 35 crore.